

'பிரம்மன்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ள பாடலுக்கு சசிகுமாருடன் ஆடியிருக்கிறார் நடிகை பத்மப்ரியா.
சசிகுமார், லாவண்யா, சந்தானம், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'பிரம்மன்'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, சாக்ரடீஸ் இயக்கியிருக்கிறார். இவர் மெளலியிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இப்படத்தில் 'வாடா வாடா நண்பா' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். படத்தில் இப்பாடலுக்கு சசிகுமாருடன் ஆண்ட்ரியா நடனமாடியிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 'பிரம்மன்' படத்தில் இப்பாடலுக்கு சசிகுமாருடன் பத்மப்ரியா நடனமாடியிருக்கிறார். ‘மிருகம்’ திரைப்படத்திற்குப் பிறகு பத்மப்ரியாவிற்கு இங்கு பெரிய வரவேற்பு இல்லாததால், தமிழ்ப் படங்களில் இருந்து பத்மப்பிரியா ஒதுங்கியிருந்தார். இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் காலூன்ற திட்டமிட்டிருக்கிறாராம்.
மேலும், இப்படத்தில் காமெடி காட்சிகளில் சந்தானம், சூரி இருவரும் ஒன்றாக வருவது போன்று காட்சிகள் கிடையாதாம். முதல் பாதியில் சந்தானமும், பின் பாதியில் சூரியும் வருகிறார்களாம்.