

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் - கெளதம் மேனன் இணைந்துள்ள படப்பிடிப்பு தொடங்கினாலும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் இசையமைப்பாளர் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.
தற்போது இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். கெளதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி நீண்ட நாட்கள் கழித்து இப்படத்திற்காக பணியாற்றுகிறது.
'மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'பச்சைக்கிளி முத்துச்சரம்' மற்றும் 'வாரணம் ஆயிரம்' ஆகிய கெளதம் மேனன் படங்களில் இணைந்து பணியாற்றியவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதற்கு பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் இவர்களை மீண்டும் இணைந்து வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டார்.
அதுமட்டுமன்றி, இப்படத்தில் "தானும் நடித்து வருவதாகவும், ஆனால் இயக்குநர் கெளதம் மேனன் தான் என்ன வேடத்தில் நடித்து வருகிறேன் என்று கூறுவார்" என்று தனது ட்விட்டர் தளத்தில் அருண் விஜய் தெரிவித்து இருக்கிறார்.