

மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி 'மாரியப்பன்' என்ற பெயரின் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.
2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும்.
மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐஸ்வர்யா தனுஷ் படமொன்றை உருவாக்க இருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழில் இப்படம் உருவாகவுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.
மாரியப்பன் வேடத்தில் நடிப்பதுக்கான சரியான ஆளைத் தற்போது படக்குழு தேர்வு செய்து வருகிறது. ஆனால், படத்தின் போஸ்டருக்காக மாரியப்பன் தங்கவேலுவை வைத்தே போட்டோ ஷூட் நடத்தி போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு.
'மாரியப்பன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார் 'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' படங்களின் இயக்குநர் ராஜூமுருகன். யாருமே எதிர்பாராத வண்ணம், இப்படத்தின் போஸ்டரை புத்தாண்டு சிறப்பாக ஷாருக்கான் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
சமூக வலைதளத்தில் இருக்கும் பல்வேறு திரையுலகினரும் ஐஸ்வர்யா தனுஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.