

'ராஜா ராணி' படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் நடிக்க, புதுமுக இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கும் படம் 'ராஜா ராணி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தினை தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்ததில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் இசையும் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வது போலவே அமைந்திருந்தது.
இந்நிலையில், படக்குழு படத்தினை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். படத்தைப் பார்த்துவிட்டு எந்த ஒரு இடத்திலும் கட் சொல்லாமல் 'யூ' சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.
சென்சார் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், தயாரிப்பு நிறுவனம் செப்டம்பர் 27 ஆம் தேதி 'ராஜா ராணி' வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.
செப்டம்பர் 27-ம் தேதி 'ராஜா ராணி' படத்துடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படமும் வெளியாகவுள்ளது. ஆனால், அப்படம் இன்னும் சென்சார் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.