

இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியது தேவையற்றது என்று நடிகர் சங்கச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.
'கன்னா பின்னா' இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குநர் சேரன். அவ்விழாவில் பேசிய போது, "தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள். போலீஸும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்து கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய மாநில அரசுகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்றாங்க. இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டு போய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதை பண்ணினோம் என அருவருப்பாக இருக்கிறது” என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.
சேரனின் இந்தப் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால், "அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் இலங்கை தமிழர் பற்றிய பேசியது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது அமைதியில் வாழட்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பொதுவெளியில் சேரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.