

'பாகுபலி 2' தமிழ் பதிப்பின் 44 விநாடி காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலுமே இப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது. டிக்கெட் முன்பதிவில் அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள், அனைத்து மொழிகளிலுமே விற்று தீர்ந்துள்ளன. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
இந்நிலையில், 'பாகுபலி 2' படத்தின் தமிழ் பதிப்பிலிருந்து சுமார் 44 விநாடி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியானது. அதில் ராணா அரசராக பொறுப்பேற்கும் முக்கிய காட்சிகளாக இடம்பெற்றிருந்து. படக்குழு துரிதமாக செயல்பட்டு, உடனடியாக இணையத்திலிருந்து நீக்கியது. மேலும், எங்கிருந்து இக்காட்சிகள் வெளியானது என்பதை விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
சில மாதங்களுக்கு முன்பாக, கிராபிக்ஸ் பணிகள் நடைபெறும் இடத்திலிருந்து சில காட்சிகள் வெளியாகி அதை உடனடியாக நீக்கி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தது காவல்துறை.
இந்நிலையில், 'பாகுபலி 2' தமிழ் பதிப்பின் 44 விநாடி காட்சிகள் மற்ற மொழிகளில் இல்லாமல், தமிழில் மட்டும் வெளியானதானல், தமிழ் திரையுலகிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.