அரசியல் பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்காதீர்கள்: பத்திரிகையாளர்களிடம் ரஜினி

அரசியல் பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்காதீர்கள்: பத்திரிகையாளர்களிடம் ரஜினி
Updated on
1 min read

அரசியல் பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்காதீர்கள் என்று பத்திரிகையாளர்களிடம் ரஜினி வேண்டுகோள்

ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் 4-வது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்றைய நிகழ்வின் போது ரசிகர்களிடம் மனம் திறந்து எதுவும் பேசவில்லை. ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த், ரசிகர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரசிகர்கள் சந்திப்பு முடிந்தவுடன், மண்டபத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி எதையும் பேசவில்லை. வீட்டிற்கு சென்றவுடன், அங்கு வாசலில் இருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, "20 வருடங்களுக்கு முன்பு இருந்த ரசிகர்கள் இன்னும் அதே உற்சாகத்துடன் இருக்கிறார்கள், இன்னும் உற்சாகம் குறையவில்லை. அவர்களை நேரடியாக பார்க்கும் போது சிலருக்கு வயதாகிவிட்டது. எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்கள் என்னைப் பார்ப்பதும், நான் அவர்களைப் பார்ப்பதுமே ஒரு இன்பம் தான்.

இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களும் அதே ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ரசிகர்களுடான சந்திப்பு இவ்வளவு சீக்கிரம் முடியப் போகிறதே என்று வருத்தமாக இருக்கிறது. அவர்களது சந்தோஷத்தைப் பார்த்து நானும் சந்தோஷமாகி விட்டேன்.

இன்னும் 18 மாவட்டங்களில் உள்ளு ரசிகர்களை சந்திக்கவுள்ளேன். விரைவில் அது குறித்தும் பேசி, எப்போது என முடிவெடுக்கவுள்ளேன். ரசிகர்களிடம் எப்போதுமே குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். கெட்ட பழக்கங்களை விட்டுவிடுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்று பேசினார் ரஜினி.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் "கடவுள் விருப்பமிருந்தால் அரசியலுக்கு" என்று கேள்வியை முடிக்கும் முன்பே "தயவு செய்து அரசியல் பற்றி எந்தவொரு கேள்வியும் கேட்காதீர்கள்" என்று பதிலளித்தார் ரஜினி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in