

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம் நிவின் பாலியுடன் இணைந்து, இயக்குநர் கெளதம் ராமச்சந்திரனின் இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ்ப் படத்தில் இரண்டாவது முக்கியப் பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இதுகுறித்துப் பேசிய இயக்குநர் கெளதம், "நடராஜை முறைப்படி ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஏராளமான கலைஞர்களை பரிசீலனை செய்துவிட்டு, முடிவாக இவரைத் தேர்ந்தெடுத்தோம். இந்த கதாபாத்திரத்துக்காக முதலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமாரைத்தான் யோசித்தோம். ஆனால், அவரின் ரோல் யூகிக்கக் கூடியதாக இருக்கும் என்பதால் அந்த யோசனையைக் கைவிட்டோம்.
ரசிகர்கள் எதையும் முன்கூட்டிய தீர்மானிக்க முடியாத வகையில் இரண்டாவது கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதற்கு நடராஜ் எல்லா வகையிலும் பொருத்தமாக இருந்தார்.
படத்தலைப்பு குறித்து
படத்தின் பெயர் 'சாண்டா மரியா' என்று தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. அந்த தலைப்பு பரிசீலனைகளில் இருக்கின்ற தலைப்புகளில் ஒன்று. விரைவில் தலைப்பை முறைப்படி அறிவிக்க இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநரான கெளதம் ராமச்சந்திரன், இந்த படத்தை 'உலிடவரு கண்டந்தே' என்னும் கன்னட க்ரைம் த்ரில்லர் படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கிறார். இதில் 'யூ-டர்ன்' புகழ் ஷ்ரதா ஸ்ரீனாத், க்ரைம் ரிப்போர்ட்டராக நடிக்கிறார். படக்குழு இப்போது தென்னிந்தியாவின் முக்கிய கடற்கரை கிராமமான மனப்பாட்டில் உள்ளது. அங்கே படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளை எடுத்துவருவதாக படக்குழுவினர் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.