

'மிருதன் 2' மற்றும் 'தனி ஒருவன் 2' படம் எப்போது உருவாகும் என்பதற்கு ஜெயம் ரவி பதிலளித்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா சைகல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வனமகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 23ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
'மிருதன் 2', 'தனி ஒருவன் 2', 'சுசீந்திரன் படம்' மற்றும் 'கெளதம் மேனன் படம்' ஆகியவற்றி எப்போது நடிக்கவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ஜெயம் ரவி, "கெளதம் மேனன் மற்றும் சுசீந்திரன் இருவரின் படங்களும் தற்போதைக்கு செய்யவில்லை.
அண்ணனோடு இணையும் படம் 'தனி ஒருவன் 2' ஆக இருக்குமா என்று தெரியாது. ஆனால், 2-ம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளது. உனது 25-வது படமாக நம்ம ஒரு படம் பண்ணலாம் என்று அண்ணன் வாக்குறுதி கொடுத்துள்ளார். அது கூடியவிரைவில் நடைபெறும்.
'மிருதன்' இயக்குநரோடு தான் 'டிக்:டிக்:டிக்' பணியாற்றி வருகிறேன். வேறு ஒரு களத்தில் பணிபுரியலாம் என்று நினைத்து தான் பணிபுரிந்து வருகிறோம்.
கண்டிப்பாக மீண்டும் அவரோடு இணைந்து படம் செய்வேன். அது 'மிருதன் 2' ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்" என்று தெரிவித்தார் ஜெயம் ரவி.