என்னைப் பற்றிய செய்தி வதந்தியே : இயக்குநர் விஷ்ணுவர்தன்
எனது அடுத்த படத்திற்கான கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். யார் ஹீரோ என்பது இன்னும் முடிவாகவில்லை என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறினார்.
'ஆரம்பம்' படத்திற்கு கிடைத்த வரவேற்பினால், விஷ்ணுவர்தனின் அடுத்த படம் என்ன என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் விஷ்ணுவர்தன் சொந்தமாக ‘விஷ்ணுவர்தன் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அஜித் நடிக்கும் படத்தினை இயக்கி தயாரிப்பார் என்று செய்திகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து விஷ்ணுவர்தனை தொடர்புக் கொண்டு கேட்ட போது, "கண்டிப்பாக இல்லை. என்னோட அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். யார் நடிக்க இருக்கிறார் என்பது எல்லாம் கதை எழுதி முடித்த உடன் தான் முடிவு செய்வேன். அதற்குள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து இயக்கி தயாரிக்க இருக்கிறேன் என்பது எல்லாம் வதந்தி தான்.
நான் எப்போதுமே கதை எழுதி முடித்த உடன் தான் தயாரிப்பாளர் யார், நடிகர் யார் என்பதை முடிவு செய்யும் பழக்கம் உடையவன்" என்று கூறினார்.
ஆகவே, அஜித் நடிக்க மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கி, தயாரிக்க இருக்கும் செய்தி முழுக்க வதந்தியே... ஆனால், இந்த வதந்தி சீக்கிரம் உண்மையாக வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
