

'கோச்சடையான்' படத்தினைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க கே.எஸ்.ரவிகுமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'எந்திரன்' படத்தினைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் படம் பூஜையோடு நின்றது.
பூரண உடல்நலம் சரியான உடன் ரஜினி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்கினார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் படம் என்பதால் மொத்த படப்பிடிப்பே 20 நாட்கள் மட்டுமே நடைபெற்றது.
முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து தயாராகி, மார்ச் 9ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அமிதாப் பச்சன் கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்.
ரஜினி நடிப்பில் முழுநீள படம் பார்ப்பது எப்போது என்ற ரஜினி ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். அவர்களுடைய ஏக்கத்தை போக்கும் வண்ணம் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் விரைவில் துவங்கவிருக்கிறது.
'சாருலதா' இயக்குநர் பொன் குமரனின் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார் 'ராக்லைன்' வெங்கடேஷ்.
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசி வருகிறார்கள். மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்கள். ரஜினிக்கு ஜோடியாக என்பதால் மற்ற படங்களின் கால்ஷீட் தேதிகளை அலசி ஆராய்ந்து வருகிறார்.
'கோச்சடையான்' இசை வெளியீடு அன்று, இப்படத்திற்கான அஸ்திரத்தை வீச இருக்கிறார் ரஜினி.