

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை மவுன விரத போராட்டத்தில் ஈடுபட போவதாக நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னையில் நேற்று நடிகர் சிம்பு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழன் என்கிற பெருமையும், கர்வமும் எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால், தமிழனை சுற்றி மட்டும் நாளுக்கு நாள் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது. இங்கே எதற்கும் தீர்வு இல்லை. காரணம் தமிழர்கள் எல்லா வகையிலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அரசியல், ஜாதி, சினிமா, மதம் என ஒவ்வொரு விஷயத்திலும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
காவிரி பிரச்சினையில் கர்நாடக மக்களுக்கு உள்ள உணர்வு, தமிழர்களுக்கு இல்லையென்றே தோன்றுகிறது. காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. இன்று தமிழ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு விஷயத்தில் நின்று போராடுபவர்களையும் தண்டிக்கத்தான் வருகிறார்களே தவிர மாணவர்கள், இளைஞர்கள் முன்னெடுக்கிற போராட்டத்தை ஒன்றுப்படுத்தி கொண்டு செல்ல இங்கே யாரும் இல்லை.
அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் தனித்தனியாக போராடுவதால் பலன் கிடைக்காது. ஜல்லிக்கட் டுக்கு ஆதரவாக அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக நாளை (இன்று) மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் மவுன விரத போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன். அதைப்போலவே, தமிழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் இருப்பிடங்களில் நின்று இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு சிம்பு கூறினார்.