

திரைப்பட இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் திருமணம் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
'கிரீடம்', 'தெய்வத்திருமகள்', 'தலைவா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய். அவருக்கும் நடிகை அமலா பாலுக்கும் காதல் ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் வெளியானதும் இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. கேரள மாநிலம் கொச்சியில் நிச்சயதார்த்தம் ஜூன் 7-ம் தேதி நடந்தது,
இந்த நிலையில், சென்னையில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்து மத முறைப்படி, நடிகை அமலா பால் கழுத்தில் இயக்குநர் விஜய் தாலி கட்டினார்.
இந்தத் திருமண நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாலா, மணி ரத்னம், நடிகர்கள் விக்ரம், ஆர்யா, இசையமைப்பாளர் ஜி,வி.பிரகாஷ், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.