வளரும் படங்கள்

வளரும் படங்கள்
Updated on
2 min read

அதி மேதாவிகள் காதலித்தால்...

கல்லூரிக்காதல் பலருக்கு ஜாலியான விஷயம். இன்னும் பலருக்கு மறக்கமுடியாத பாடம். இன்றைய பாடங்களை நாளை படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் கல்லூரி வாழ்க்கையில், காதலியை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று யாரும் தள்ளிப்போடுவதில்லை. அந்தவகையில் கல்லூரிக் காலம் என்பதே காதலிப்பதற்காக உருவாக்கப்பட்ட நந்தவனம் என்று கனவு காணும் இரண்டு மாணவர்களின் காதல் கதைதான் ‘அதி மேதாவிகள்’ படத்தின் கதை.

“ஒவ்வொரு கல்லூரி மாணவன் வாழ்க்கையிலும் காதலும் காதல் நிமித்தமான காமெடிகளும் நிறைய உண்டு. இந்த காதலர்களின் வாழ்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறேன்” என்று சொல்கிறார் இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன். இவர் பாக்யராஜின் உதவியாளர். விளம்பர படங்களை இயக்கியுள்ள அனுபவத்தின் மூலம் திரைப்படம் இயக்க வந்திருக்கிறார். வினோ வசனம் எழுதுகிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் இரண்டு அதி மேதாவிகளாக, சன் மியூசிக் வீடியோ ஜாக்கியான சுரேஷ் ரவி, இஷாராநாயர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலாபவன் மணி நடிக்கும் இந்தப்படம் சென்னை மற்றும் கேரளத்தில் படமாகி வருகிறது.

மீண்டும் ஜீவன்

கடந்த சில ஆண்டுகளாக நடிப்புக்கு விடுமுறை விட்டிருந் ஜீவன், தற்போது ‘நூதன்’ படத்தின் மூலம் நாயகனாக திரும்ப வந்திருக்கிறார். முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு பல வெற்றிப் படங்களைத் தயாரித்த வி.சுந்தர், சன் மூன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். ஜீவனுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஜெயமாலாவின் மகள் சௌந்தர்யா அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் செல்வா. இவர் இயக்கும் 27வது படம் இது. ஏற்கெனவே ஜீவன் செல்வா, இருவரும் இணைந்து ‘நான் அவனில்லை’ படத்தின் இரண்டு பாகங்களைக் கொடுத்தவர்கள். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்கிற கண்ணதாசன் பாடல் வரிகளேயே இப்படத்தின் கதைக்களமாக்கி இருக்கிறேன் என்றார் செல்வா. வழக்கமாக எதிர்மறைக் கதாநாயகனாக நடிக்கும் ஜீவன் இதில் மென்மையான ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்ப்படத்தில் சிம்பொனி

பரதனில் தொடங்கி பாசில் வரை மலையாளப் பட இயக்குநர்கள் பலர் தமிழ் திரையுலகிற்கு வந்துள்ளனர். இந்த வரிசையில் வந்துசேர்ந்திருக்கிறார் இளம் மலையாள இயக்குநரான ஹைதர் அலி. ‘ஒரு வானவில் போலே’ என்ற படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார். அதுவும் இனிமையான பாடல்களைக் கொண்ட ஒரு காதல் கதையுடன்.

முதல்முறையாக இரண்டு சிம்பொனி இசைக்கோவைகள் இந்தப்படத்தில் கதை சொல்லப் பயன்படுத்தப்படுகிறதாம். இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இசைக்கலைஞர்களை இதற்காகவே இந்தப் படத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறார் ஹைதர் அலி. அவர்கள் கலாபவன் மணி மற்றும் இந்தியாவின் தலைசிறந்த பியானோ இசைக்கலைஞரான ஸ்டீபன் தபேசி. இவர்கள் சிம்பொனியை உருவாக்குவதில் இசைப்பங்களிப்பும் செய்திருக்கிறார்கள்.

இசைக்கருவிகளை பழுதுபார்த்துத் தரும் ஒரு இளைஞனுக்கும், ஒரு இளம் பாடகிக்கும் இடையே ஏற்படும் காதல் இசையின் துணையுடன் எப்படி வளர்கிறது.. இசையே அவர்களது காதலுக்கு எப்படி எதிரியாகவும் மாறுகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. வசனங்களால் அதிகம் பேசாமல் இசையால் கதையை நகர்த்தியிருக்கிறார் ஹைதர் அலி. இசைக்கருவிகள் பழுது நீக்கும் இளைஞராக அனுமோகன் நடிக்க, ‘அவள் பெயர் தமிழரசி’ புகழ் மனோசித்ரா பாடகியாக நடிக்கிறார். இசை ஒரு கதாபாத்திரமாகும் இந்தப்படத்தின் இசையை ரியாஸ்ஷா இசையமைக்கிறார். படம் முழுக்க காதலும் இசையும் ரசிகர்களின் இதயத்தை ஜில்லிட வைக்கும் என்கிறார் இயக்குநர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in