

“இங்கே நல்ல படங்களுக்கு எடுத்தவுடனே அங்கீகாரம் கிடைக்கறதில்ல. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் டிரெய்லர் பாத்துட்டே என் படத்தை வாங்கிட்டாங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அந்த நம்பிக்கையில நானே என் படத்தைச் சொந்தமா ரிலீஸ் பண்றேன்” என்று சந்தோஷமாக பேச்சைத் தொடங்குகிறார் 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' இயக்குநர் எஸ்.எஸ்.குமரன். சென்னையில் ஒரு மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தோம்.
ஒன்றரை வருஷமா எஸ்.எஸ்.குமரனை பார்க்க முடியவில்லையே...?
இந்த படத்தின் கதைக்காகவும், திரைக்கதைக்காவும் மெனக்கெட்டேன். கேரள மாநிலத்தோட அழகை யாருமே இதுவரை இவ்வளவு அழகா பதிவு பண்ணியிருக்க மாட்டாங்க. அந்த அழகான பதிவுக்காக, ஒரு வருஷம் கேரளாவிலேயே இருந்து அந்த மக்களோட கலாச்சாரம், திருவிழான்னு எல்லாத்தையும் படம் பிடிச்சிருக்கேன். மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஒரு பாலமாக இப்படம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்தில் அப்படி என்ன சொல்லியிருக்கீங்க?
கேரள பெண்ணைத்தான் தன் பையனுக்கு திருமணம் முடித்துவைக்க வேண்டும் என்று நினைக்கும் அப்பா, தமிழ்நாட்டு பெண்ணைத்தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று நினைக்கிற அம்மா. பையனை கேரளாவுக்கு அனுப்பி வைக்கிறார் அப்பா. அங்கே பையன் என்ன பண்றான். யாரோட ஆசை நிறைவேறுச்சு என்பதை ஜாலியா சொல்லிருக்கேன். இந்தப் படத்தின் மூலம் நான் கருத்தெல்லாம் சொல்லலை. 2 மணி நேரம் தான் படம். ஒவ்வொரு பிரேமும் யாரையும் முகம் சுளிக்க வைக்காமல் இருக்கும். ‘கேரளா.காம்’ அப்படிங்குற பெயர்ல கேரளாவுலேயும் இந்த படத்தை நானே ரிலீஸ் பண்றேன்.
மலையாள படங்கள்ல கூட இதுவரைக்கும் யாருமே இவ்வளவு அழகாக கேரளாவைக் காட்டல. புதுசா எதாவது சொல்றப்போ முதல்ல வியாபார ரீதியா சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். 'சேது', 'சுப்பிரமணியபுரம்' போன்ற வித்தியாசமான படங்கள் மக்கள்கிட்ட பெரியளவில் ரீச்சாயிருக்கு. அந்த வகையில் இந்த படமும் ரீச்சாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
இந்த படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறாரே?
ஆமாம்… இதுக்கு முன்னாடி என் படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதியதில்லை. சில கவிஞர்களிடம் இந்த படத்தின் தலைப்பை சொன்னதுமே பயந்துபோய் நான் எழுதமாட்டேன்னு ஒதுங்கிட்டாங்க. துணிச்சலும் எழுத்தும் ஒரு சேர அமைந்தவர் வைரமுத்துன்னு தெரியும். அவரிடம் டைட்டிலை சொன்னதுமே தலைப்பை மாத்திடாதீங்கன்னுதான் முதல்ல சொன்னார். ‘கேரளாபோல ஒரு மண்ணும் இல்லை. கேரள கிளிபோல ஒரு பெண்ணும் இல்லை’ன்னு அனுபவிச்சு எழுதியிருக்கார். அவருடைய சமுதாய கண்ணோட்டமும் வரிகளில் இருக்கு. ‘முல்லை பெரியாறா கேட்டேன். உன் முல்லைச் சிரிப்பைதானே கேட்டேன்’ என்று ஒரு வரி எழுதியிருக்கிறார்.
படத்தில் வேறு என்ன ஸ்பெஷல்?
தமிழ் பேச்சாளர் ஞானசம்பந்தனை மலையாளம் பேச வச்சுருக்கேன். கமல்ஹாசன் சாரும் அவரும் நல்ல நண்பர்கள்னு எல்லாருக்கும் தெரியும். கமல் சார் சொல்லிக் கொடுத்து ஞானசம்பந்தனே மலையாளம் கலந்த தமிழில் டப்பிங் பேசியிருக்கார். அவருக்கு ஜோடியா ரேணுகா, அபிசரவணன்னு புது பையன் ஹீரோ. இந்த படத்துல மூன்று நாயகிகளை அறிமுகப்படுத்தறேன். ஹீரோயின் தேடி கேரளாவுக்கு போற இயக்குனர்களுக்கும் இவங்க வரவு உதவியா இருக்கும்னு நம்புறேன்.
இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இப்போ இயக்குநர், தயாரிப்பாளரா ஆகிட்டாரா?
அப்படியெல்லாம் இல்ல. நான் இசையமைக்க ஒப்புக்கிட்டா யாரோட தலையீடும் இருக்கக்கூடாது. 'பூ', 'களவாணி' படங்களின் இசை இப்போதும் எல்லோராலயும் கேட்கப்படுது. நிறைய படங்கள் இசையமைக்க வந்தது. ஆனா, வரும்போதே "சார்... இந்த பாட்டு மாதிரியே இருக்கணும்"னு வர்றாங்க. அப்படி பண்றதுக்கு நான் எதுக்கு. அதனால பண்றதில்லை. சும்மா இருக்கிறதுக்கு படம் இயக்கலாம்னு 'தேநீர் விடுதி' படம் பண்ணினேன். அந்த படம் சரியாக போகல. ஆனா, எதெல்லாம் பண்ணணும், பண்ணக்கூடாதுனு கத்துக்கிட்டேன். 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' படத்துல அதை எல்லாம் சரி பண்ணியிருக்கேன்.
இப்போ இந்த படத்தோட வியாபாரம் மூலம் நிறைய விஷயங்கள் சாத்தியம்னு தெரிஞ்சுக்கிட்டேன். இனிமேல் என்னோட தயாரிப்பில் புதுமுக இயக்குநர்களை அறிமுகப் படுத்தலாம்னு இருக்கேன். அதே மாதிரி அடுத்தும் படம் பண்ற திட்டம் இருக்கு.