

'கோச்சடையான்' படத்தினை ரஜினி படமாக அல்லாமல் அனிமேஷன் படமாக பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளார்.
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஷோபனா மற்றும் பலர் நடிக்க, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் எழுதிய கதை, திரைக்கதையை சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், "படம் பார்க்க வருபவர்கள் ரஜினி படம் பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தோடு வரக்கூடாது. நிஜத்தில் அல்ல, படத்தில் அனிமேஷன் ரூபத்தில் ரஜினி இருக்கிறார். ரசிகர்கள் இதனை மனதில் கொண்டு படத்திற்கு வர வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களால் படத்தினை சந்தோஷமாக பார்க்க முடியும்.
ஒரு புதிய முயற்சியை இப்படத்தின் மூலம் எடுத்திருக்கிறோம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளோடு வந்து படத்தை ரசிக்கும் வண்ணம் எடுத்திருக்கிறோம்.
'கோச்சடையான்' திரைப்படமே 'ராணா'வில் இருந்து உருவானது தான். ரஜினி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் 'ராணா' படத்தினை கைவிட்டு விட்டோம். ஆனால், நான் உடனே 'ராணா'வின் முன்கதை ஆக 'கோச்சடையான்' கதையினை எழுதினேன்.
'கோச்சடையான்' கதையினை ரஜினியிடம் கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது." என்று கூறினார்.
ஏப்ரல் 11ம் தேதி படத்தினை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.