

கெளதம் மேனன் - சிம்பு இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு இருப்பதால் 'அச்சம் என்பது மடமையடா' ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை 'ஒன்றாக என்டர்டெயின்மன்ட்' நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இதனிடையே கெளதம் மேனன் - சிம்பு இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சிம்பு. திண்டுக்கல்லில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பி இருக்கிறார் சிம்பு.
தற்போது, கெளதம் மேனன் - சிம்பு இருவருக்குமான கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தையில் முடிவுற்று இருக்கிறது.
'அச்சம் என்பது மடமையடா' டப்பிங் பணிகள் மற்றும் 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு. ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.