

விவசாயிகளின் நிலை குறித்து தனியார் விருது வழங்கும் விழாவில் விஜய் உருக்கமாக பேசினார்.
தனியார் இணையதளத்தின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் 'Samrat of South Indian Box Office' என்ற விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை இயக்குநர் மகேந்திரன் வழங்கினார். இவ்விருதைப் பெற்றுக் கொண்டு தன் படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தன்னுடைய பேச்சில் நன்றி தெரிவித்தார் விஜய்.
மேலும் தன்னுடைய பேச்சில் விவசாயிகளின் பிரச்சினைக் குறித்தும் குறிப்பிட்டார். விவசாயிகள் பிரச்சினைக் குறித்து விஜய் பேசியது, "நான் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன். நாம் அனைவருமே நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகள் இன்று நன்றாக இல்லை. உழைப்புக்கு கிடைத்த பலனாக இங்கு பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
உணவு, உடை, இருப்பிடம் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர் விவசாயி. பசியை எளிதாக கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை என நினைக்கிறேன். காசு கொடுத்தால் கூட சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது என்ற ஒரு நிலை வந்தால் மட்டுமே நாம் விவசாயிகளை பற்றி புரிந்து கொள்ள முடியும். அவர்களுடைய நிலையை புரிந்துக் கொள்வது அவசியம் என்பதை விட அவசரமும் கூட. இப்போது கூட நான் முழித்துக் கொள்ளவில்லை என்றால், அடுத்த சந்ததிக்கு அதுகூட கிடைக்காது.
ஒரு ஜவுளிக்கடை முதலாளி இன்னொரு ஜவுளிக்கடைக்கு சென்று துணி எடுக்க முடிகிறது, ஒரு நகைக்கடை முதலாளி இன்னொரு நகைக்கடைக்கு சென்று நகை வாங்க முடிகிறது. ஆனால், ஒரு விவசாயி மட்டும் தான் ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறான். ஏனென்றால் இலவச அரசிக்காக. இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது எல்லாம் பிறகு தான், விவசாயிகள் நல்லபடியாக வாழக்கூடிய அரசாக மாற வேண்டும்" என்று பேசினார் விஜய்.