

மாடிப்படிகளில் இறங்கும்போது தவறி விழுந்ததால் கமல்ஹாசனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு கமல்ஹாசன் கடந்த வாரம் சென்னை திரும்பினார். இதுவரை எடுத்த காட்சிகளின் எடிட்டிங் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடிப் படிகளில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். இதனால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற் பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ சேவை பிரிவு இயக்குநர் டாக்டர் என்.சத்தியபாமா கூறும்போது, “கமல்ஹாசனை பரி சோதனை செய்து பார்த்தபோது, அவருடைய வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து எலும்பு முறிவை சரிசெய்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ள கமல்ஹாசனை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார் கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலை நன்றாக உள்ளது. இன்னும் 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்” என்றார்.
லண்டனில் நேற்று தொடங்கி ஜூலை 24-ம் தேதி வரை நடைபெறும் ‘லண்டன் இந்தியன் திரைப்பட விழா’வில் கலந்துகொள்ள கமல் ஹாசன் திட்டமிட்டிருந்தார். அந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது காலில் காயமடைந்துள்ளதால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. அதுபோல் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான தேதியும் தள்ளிப்போகும் வாய்ப் புள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கமல்ஹாசனின் உடல் நிலை தேறி வருவதாக அவரது மகள் ஸ்ருதிஹாசன், ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.