"ஆர்யாவுக்கும் எனக்கும் சண்டையா?": இயக்குநர் மகிழ்திருமேனி

"ஆர்யாவுக்கும் எனக்கும் சண்டையா?": இயக்குநர் மகிழ்திருமேனி
Updated on
2 min read

‘இது ஒரு கமர்ஷியல் படம். இங்கே கமர்ஷியல் என்பதை ஒரு தட்டையான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம். அப்படியான ஒரு நியதியை தாண்டி ஜெயித்த படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உயர்ந்த படங்களை ஆர்ட்பார்ம் படங்கள் என்றோ அல்லது கமர்ஷியல் படங்களை தரம் தாழ்ந்த படங்கள் என்றோ நான் வரையறுப்பதில்லை. அந்த ஓட்டத்தில்தான் இப்போது ஆக்‌ஷன் கலந்த திரில்லர் சப்ஜக்டை கையில் எடுத்துக்கொண்டேன்!’’ என்று தனது ‘மீகாமன்’ படத்தைப் பற்றி சொல்லத் தொடங்குகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

இயக்குநர்கள் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் இருவரின் பட்டறையில் இருந்து புறப்பட்டவர். ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’ படங்களை அடுத்து மூன்றாவதாக ‘மீகாமன்’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் திரில்லர் களத்தில் ஆடவருகிறார், மகிழ்திருமேனி. சினிமா பற்றி அழுத்தமாகவும் தெளிவாகவும் பேசுகிறார்.

‘மீகாமன்’ வழியே என்ன சொல்ல வருகிறீர்கள்?

எந்த மாதிரியான படம் என்றாலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும். மக்களை முட்டாளாக்காமல், லாஜிக்கின் எல்லையை மீறாத அம்சங்களோடு படத்தை எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக பயணிப்பவன், நான். அந்த வகையில் ஆக்‌ஷனை மையமாக வைத்து நகர்கிறேன். என்னுடைய முந்தைய படங்களிலிருந்து இந்தப்படம் முற்றிலும் வேறுபடும். ஒரு கப்பல் தலைவனுக்கும் ஒரு வில்லனுக்கும் இடையே நடக்கும் வித்தியாசமான யுத்தம் இது. ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இவர்களை வைத்து ஆக்‌ஷன் திரில்லர் என்றதும் அடிப்படையான பார்முலா தோன்றும். அங்கே நின்று திரைக்கதை, படமாக்கும் விதம், விஷுவல் எடிட்டிங் பேட்டன் இவற்றிலெல்லாம் ஒரு பாராமீட்டர் அளவுக்குள் மாறுபட்ட ஒரு ட்ரீட்மெண்ட்டாக இந்தப்படம் அமையும்.

இளம் இயக்குநர்களுக்கும், இளம் ஹீரோக்களுக்குமான அலைவரிசை இங்கே எப்படி இருக்கிறது?

தமிழ் சினிமா தற்போது ஆரோக் கியமாக இருக்கிறது. அதுக்கு ஹீரோக்களும் ஒரு காரணம். 25, 30 ஆண்டுகளுக்கு முன் நாம் நினைத்துப் பார்க்கமுடியாத நிலை இப்போ இருக்கிறது. ஹீரோக்கள் இங்கே தங் களுக்கான வரையறைகளை உடைக்க அவர்களே தயாராக இருக்கிறார்கள். இப்படியான சூழல் இயக்குநர்களுக்கு சுதந்திரமாக செயல்பட மிகவும் வசதியாக இருக்கிறது. மக்களிடம் ஒரு இயக்குநர் கொண்டு செல்ல நினைக்கும் விஷயத்தை எடுத்துச் செல்ல இங்கே ஹீரோக்கள் துணை யாக நிற்கிறார்கள். இப்படியான சூழலால் இந்தியாவிலேயே, ஒரு வியப்பான களமாக தமிழ் சினிமா களம் இருக்கிறது. இது போதுமே.

தொடர்ந்து தமன் இசையில் பயணிக்கிறீர்களே?

அவரோட தகுதி இன்னும் இங்கே முழுமையாக உணரப்படவில்லை. நான் என்ன நினைக்கிறேனோ, அதை சொல்லாமலேயே புரிந்துகொள்ளக் கூடியவர். கதையும் அதன் தேவையும் என்ன என்பதை தீர்மானிக்கும் பக்குவம் அவரிடம் இருக்கிறது. முன் இரண்டு படங்களையுமே மிகப்பெரிய வேறுபாட்டுடன் கொடுத்திருப்பார். முதல்படமான ‘முன்தினம் பார்த்தேனே’ படத்திற்கு ஜாஸ் சாங்க் ஒன்று கேட்டேன். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். அந்தப் பாடலை சிறப்பாக கொடுத்தார். அவரோட ரேஞ்ச் அகலமானது.

ஒரு வழியாக ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகாவை பிடிச்சிட்டீங்கபோல?

சினிமா பெருமளவுக்கு பணம் சார்ந்த விஷயம். எல்லா வேலைகளையும் முடிக்க இங்கே பல கட்டத்தை தாண்ட வேண்டியிருக்கிறது. ஹீரோ, ஹீரோ யின் தேர்வுகளெல்லாம் இதற்குள் பொருந்த வேண்டும். இந்தத் தேர்வில் பணம் போடும் தயாரிப்பாளர் சார்ந்த ஈடுபாடும் அதிகம் தேவை. அப்படி, அது சார்ந்த விஷயங்கள் தொடர்ந்ததால் நடிகர், நடிகைகள் தேர்வில் கொஞ்சம் மாற்றம் இருந்தது. ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறாங்க. அவங்களோட காட்சிகளை மார்ச் மாதம் ஷூட் செய்யப் போகிறோம்.

ஆர்யாவுக்கும் உங்களுக்கும் பிரச்சினை என்றெல்லாம் தகவல் கசிந்ததே?

நாங்க இருவருமே ஆச்சர்யப்பட்ட செய்தி. எதுவுமே நிகழாமல் இப்படி யான செய்தி எங்கிருந்து முளைக்கிறது என்றுதான் எனக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது. இருவருக்குமே சிரிப்பு தான் மிச்சம். இங்கே குறிப்பிட்டு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் ஆர்யாவோடு பணிபுரியும் இயக்குநர்கள் மீண்டும் மீண்டும் படம் செய்ய முன் வரக்காரணம் அவரோட அணுகுமுறையும் ஈடுபாடும்தான். கிரியேட்டிவிட்டிக்குள் எந்தவித தலையிடலும் இருக்காது. ஒத்துழைப்பான ஆள்.

உங்கள் கதையின் சூழலை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?

ஒரு படத்தை முடிக்கும் தருணத்தில் அடுத்ததாக 4, 5 ஐடியாக்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதில் என்னை முதலில் எழுது என்று ஒரு விஷயம் முட்டிக்கொண்டு நிற்கும். அதை விறுவிறுவென முடிப்பேன். அதேபோல, எந்தக் கதையை முதலில் தொடலாம் என்பதில் அதை ஏற்று நடிக்கும் நடிகர்களும், படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்களும் முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தியாக்குவதும் இங்கே முக்கியமாச்சே. எனக்கு ஒரே பேட்டன் என்று எதுவும் இல்லை. காதல், அறிவியல், நம்ம நாட்டின் எதார்த்தம் பிசகாமல் ஒரு கதை இப்படி வெவ்வேறு இடங்களில் இருந்து பதிவு செய்துகொண்டே போக வேண்டும் என்பது என் ஆசை. அப்படியான விஷயங்களோடு தொடர்ந்து நாம் சந்திப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in