Published : 28 Sep 2013 09:42 AM
Last Updated : 28 Sep 2013 09:42 AM

ராஜா ராணி: விமர்சனம்

முதல் முயற்சியிலேயே மூன்று காதல் கதைகளை கொஞ்சமும் சொதப்பாமல் திரைக்கதையில் நகர்த்தியிருக்கும் அட்லிக்கு வாழ்த்துகள்!

காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு காதலுக்குப் பிறகும் இன்னொரு காதல் இருக்கிறது, இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்ற ஒரு ரிச்சான எமோஷனல் டிராமாவைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இருக்குனர். வேண்டா வெறுப்பாக இருவர் கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு காதல் தோல்வி பிளாஷ்பேக். ஏன் அந்த தோல்வி. இவர்கள் இணைந்தார்களா என்பதுதான் கதை.

உயர்தட்டு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஜான், ரெஜினா இருவருக்கும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கையை, இவர்கள் எலியும் பூனையுமாக எதிர்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் பிரியும் நிலைக்குப் போகிறார்கள். இந்த நேரத்தில் ரெஜினாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவமனையில் இருக்கும்போது இவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன மாற்றம், தம்பதியர் என்ன ஆனார்கள் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

முதல்பாதியில் நயன்தாராவின் முன்கதை. பின்பாதியில் ஆர்யாவின் முன்கதை. இந்த இரண்டு ப்ளாஷ் பேக்குகளும் கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளதால் படம் வேகமாக நகர்கிறது. ரெஜினாவாக நயன்ராவும், ஜானாக ஆர்யாவும் பொருத்தமான ஜோடி என்று பேர் வாங்கிவிடுகிறார்கள். கைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் வேலைசெய்யும் ‘டெலிகாலரான’ ஜெய்யை, கலாய்க்கும் நயன்தாராவின் குசும்பை மொத்த திரையரங்கும் வயிறு வலிக்க சிரித்து ரசிக்கிறது. இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதாபாத்திரம் ஜெய்க்கு. மனுஷன் கலக்கி இருக்கிறார்.

ஜான் கதாபாத்திரத்தில் ஆர்யாவை ஓர் அழகான ரொமாண்டிக் ஹீரோவாக ரசிக்கலாம். நஸ்ரியாவை துரத்தித் துரத்திக் காதலிக்கும் காட்சிகள் அழகு. நஸ்ரியாவும் மலையாளத் தமிழ்பேசி. குழையும் குரலால் தன் பங்கைச் சரியாக செய்திருக்கிறார். ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் இந்த நான்கு பேரின் துடிப்பான பங்களிப்புக்கு அப்பால், சில காட்சிகளே வந்தாலும் சத்யராஜ் முத்திரை பதிக்கிறார். உணர்ச்சிகரமான கதையமைப்பு என்பதால் சந்தானத்தின் காமெடியைத் தேவையான அளவில் மட்டும் வைத்த விதம் கச்சிதம். ஆனால் அதற்குள்ளும் தனது அடல்ஸ் ஒன்லி காமெடிக்கு இடம்பிடித்து விடுகிறார் சந்தானம்.

காட்சிகளை படமாக்கிய விதத்திற்காக அட்லியைப் பாராட்டலாம். இதற்கு கிழக்கு கடற்கரை சாலை விபத்துக் காட்சி ஒன்றுபோதும். அட்லியின் காட்சிக் கற்பனைக்கு ரிச்சான ஒளிப்பதிவு வழியாக கை கொடுத்திருக்கிறார் ஜார்ஜ்.சி வில்லியம்ஸ். கடந்த காலத்தின் இரண்டுகாதல் கதைகள் கச்சிதமாக கத்தரித்த வகையில் ரூபனின் படத்தொகுப்பும் படத்தை நிறுத்தியிருக்கிறது. ஆனால் ஜி.வி.பியின் இசையில் புதிதாக எதுவுமில்லை. நல்லவேளையாக பின்னனி இசையில் கொஞ்சம் வேலை செய்திருக்கிறார். இவர்களுக்கு அப்பால் பாடல்காட்சி களில் கலை இயக்கம் தெரியும் விதமாக பணியாற்றியிருக்கும் முத்துராஜ், சவுண்ட் டிசைன் செய்திருக்கும் தபஸ் நாயக் இருவரும் உள்ளேன் ஐயா சொல்கிறார்கள்.

எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் டிவிட்ஸ்டும், அதற்கான காரணமும், அதன் பிறகான எமோஷனலும் சரியாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு குறை, படம் கொஞ்சம் நீளமாக இருக்கிறது என்பது மட்டும்தான். ஆனாலும் ஒரு 'பவர்லஞ்ச்' சாப்பிட்டது போல வெயிட்டாக இருக்கிறது.

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

பொழுதுபோக்கு, அழுத்தமான கதை, அளவான காமெடி, எதை எதிர்பார்த்துச் சென்றாலும் ராஜா ராணி உங்களுக்கு பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்க தகுதியான பொழுதுபோக்குப் படம்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x