இளைய சூப்பர் ஸ்டார்- புகழாரத்தால் நெளிந்த தனுஷ்!

இளைய சூப்பர் ஸ்டார்- புகழாரத்தால் நெளிந்த தனுஷ்!
Updated on
2 min read

'தொடரி' விழாவில் பலரும் 'இளைய சூப்பர் ஸ்டார்' என்று புகழாரம் சூட்ட, "என் தகுதிக்கு மீறி புகழ்ச்சி. அவர்கள் அன்புக்கு நன்றி. ஆனால் கூச்சமாக இருந்தது" என்றார் தனுஷ்.

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொடரி'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தனுஷ் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

தம்பி ராமையா, ஜாக்குவார் தங்கம், பாபு கணேஷ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்தில் 'இளைய சூப்பர் ஸ்டார்' என்று தனுஷை புகழ்ந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து 'தொடரி' இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், "பிரபுசாலமன் என்னை சந்தித்த போது, "எப்போது சார் தேதிகள் வேண்டும்" என்று தான் கேட்டேன். தேதிகள் சொன்னவுடன் நேரடியாக படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன்.

4 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு ஒரு நாள் கேரவாவேனில் தான் முழுக்கதையையும் கேட்டேன். நான் கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டது போது இருந்த நம்பிக்கை, கதையைக் கேட்டவுடன் இன்னும் அதிகமானது. டப்பிங் பேசிய போது படத்தின் காட்சிகளைப் பார்த்த போது இன்னும் என்னுடைய நம்பிக்கை அதிகமானது.

இங்கு பேசிய அனைவருமே நான் ரொம்ப ரிஸ்க் எடுத்ததாக குறிப்பிட்டார்கள். உண்மையில் நான் இந்தப் படத்துக்கு எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. என்னை மிகவும் அருமையாக பார்த்துக் கொண்டார் பிரபுசாலமன் சார். எனக்கு விபத்து ஒன்றில் கை முறிவு ஏற்பட்ட போதில் இருந்தே எனக்கு உயரத்தில் இருக்கும் போது தலை சுற்றும். இப்படம் முழுக்கவே ரயில் மீது என்றவுடன் கொஞ்சம் பயந்தேன். படப்பிடிப்புக்கு சென்றவுடன் தான் இதனை பிரபுசாலமன் சாரிடம் சென்றேன்.

ஒவ்வொரு காட்சி உயரத்தில் இருக்கும் போது எல்லாம் எனக்கு முன்பாக ரயிலின் மீது ஏறி என்ன பண்ண வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுவார் பிரபுசாலமன் சார். அதற்குப் பிறகு தான் என்னை ஏற வைப்பார். அந்தளவுக்கு இந்த படக்குழு என்னை அவ்வளவு பார்த்துக் கொண்டது. சண்டைக்காட்சிகளில் நான் எடுத்த ரிஸ்க்கை எல்லாம் விட, சண்டை பயிற்சியாளர்கள் அதிகமாக ரிஸ்க் எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு முன்பு நான் பண்ணியது எல்லாம் ஒன்றுமே இல்லை.

மேலும், இப்படத்தில் என்னை விட முக்கிய பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். என்னைவிட அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

ரசிகர்கள் அனைவருமே பெருமைப்படும் அளவுக்கு நான் வளர்த்து உள்ளேன் என்பதில் எனக்கு சந்தோஷம். அதே போல நீங்கள் என்னை பெருமைப்படுத்தும் அளவுக்கு வளர வேண்டும். முதலில் உங்களது குடும்பத்தை கவனியுங்கள். உங்களது தாய், தந்தை, மனைவி, அண்ணன் உள்ளிட்ட அனைவரும் தான் இறுதிவரை உங்களுடன் கூடவே வருவார்கள். உங்களது வாழ்க்கையின் இடையே வருபவர்கள் எல்லாம் வந்து சென்றுவிடுவார்கள். குடும்பம் மட்டுமே நிரந்திரம்.

இங்கு இசை வெளியீட்டு விழாவில் என்னைப் பற்றி பலரும் மிகவும் பெருமையாக பேசினார்கள். என் தகுதிக்கு மீறி புகழ்ந்தார்கள். அவர்கள் அன்புக்கு நன்றி. ஆனால் கூச்சமாக இருந்தது" என்று நெளிந்தார் தனுஷ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in