

கமல் நடிக்கவிருந்த புத்தர் கால கதை கைவிடப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
சில காலங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிக்க படமொன்றின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்க நிலையிலேயே அப்படம் கைவிடப்பட்டது.
கமல் படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை மிஷ்கின் அளித்துள்ள பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"நானும் கமல்ஹாசனும் ஒரு படத்தில் இணையும் சூழல் வந்தது. கதை விவாதம் செய்தோம். அது பௌத்த சித்தாந்தங்களைப் பற்றிய ஒரு படம். புத்தர் வாழ்ந்த காலத்துக்குப் பிறகு நடப்பது போன்ற கதை. அவரது பல் எப்படி இலங்கை வரை சென்றது என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை.
உண்மையாக நடந்த கதையில் எனது கற்பனையை சேர்த்திருந்தேன். பாடலிபுத்ராவிலிருந்து புத்தரின் மகளே அவரது பல்லை எடுத்துக் கொண்டு பயணம் செய்தார். கிழக்குப் பகுதியில் ஒரு துறைமுகத்தை அடைகிறார். அங்கிருந்து ஒரு கப்பலில் 14 நாட்கள் பயணம் செய்து இலங்கையை அடைகிறார்.
எனது கதையில் எப்படியென்றால், அவர்கள் எடுத்துக்கொண்டு போகும் வழியில் அந்த பல்லை திருட பலர் முயற்சிக்கின்றனர். அவர்களால் கிழக்குப் பகுதி துறைமுகத்துக்குப் போக முடியாமல் தெற்கு நோக்கி வருகின்றனர். அப்போது தெற்கில் இருந்த ஒரே துறைமுகம் பூம்புகார்தான். ஆந்திரா, தமிழ்நாட்டு எல்லைக்கு வருகின்றனர். அங்கிருந்து என் கதை தொடங்கும்.
இதில் கமல்ஹாசன் ஒரு கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். மோசமான குணாதிசயங்கள் கொண்ட பாத்திரம் அது. அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாக, அந்த பல்லை எடுத்துச் செல்ல பாதுகாப்பாக உடன் செல்ல வேண்டும் என பணிக்கப்படுகிறார். அவரது குடும்பமும், இன்னும் 40 பேரும் அரசனால் பணயமாக பிடித்து வைக்கப்படுகிறார்கள். புத்தரின் பல்லை கொண்டு செல்லும் குழுவை இவர் பாதுகாப்பாக பூம்புகாருக்கு கொண்டு சேர்த்து கப்பலில் அனுப்பிவைத்தால் மன்னிக்கப்படுவார். பணயமாக இருப்பவர்களும் விடுவிக்கப்படுவார்கள்.
உண்மை, கவுரவம், ஒழுக்கம் என எதைப்பற்றியும் தெரியாத ஒரு கொள்ளைக்காரன் அந்தப் பயணத்தில் சேர்ந்து, பல விஷயங்களை தெரிந்துகொண்டு கடைசியில் புத்தர் வழியில் செல்வதுதான் கதை.
படத்துக்கான நிதி கிடைக்கவில்லை. அப்போது 60-70 கோடி பட்ஜெட் என திட்டம் போட்டோம். சில நிறுவனங்களில் முயற்சித்தோம். நடக்கவில்லை. ஆனால் அப்போது அந்தப் படத்தை செய்யாதது நல்லது என நினைக்கிறேன். அன்றைய சூழலில் நான் செய்திருந்தால் அது நன்றாக வந்திருக்காது. சொதப்பியிருப்பேன். அடுத்த 2-3 வருடங்களில் அந்தக் கதையை கமல்ஹாசன் அல்லது வேறு யாரையாவது வைத்து மீண்டும் தொடங்கலாம் என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.