திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு

திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு
Updated on
2 min read

தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’.

ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வைத்துக்கொண்டு திகிலையும் காமெடியையும் கலந்து விளையாடியிருக்கிறார் ‘லொள்ளு சபா’ புகழ் இயக்குநர் ராம்பாலா.

மலை பங்களாவில் வசிக்கும் ஆவிகளின் பின்னணிக் கதையை நீட்டி முழக்காமல் பின்னணிக் குரலில் விவரித்த விதம் பேய்கள் குறித்த எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடுகிறது. பேயை விரட்ட திபெத்திலிருந்து வரும் சாமியாரின் பங்கும் படத்துக்கு சுவாரஸ்யம் சேர்க்கிறது. அதன் பிறகு சந்தானம் ஷனாயா காதலுக்கு இடம்பெயரும் திரைக்கதையில் கற்பனை வளமோ சுவாரஸ்யமோ இல்லை. ஏழைப் பையன் பணக்காரப் பெண் காதல், அப்பா வின் எதிர்ப்பு ஆகிய புராதன அம்சங்கள் தூக்கமின்மைக்குச் சிறந்த மருந்து.

பெண்ணின் தந்தை சதித்திட்டம் தீட்டிய பிறகு கதை வேகமெடுக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய காட்சி எதிர் பார்ப்பை எகிறச்செய்கிறது. இரண்டாம் பாதி அதற்கேற்ப திகிலும் சிரிப்புமாய் நகருகிறது. கடைசியில் சங்கிலித் தொடர்போன்ற அமளிகளால் திரையரங்கம் அதிர்கிறது. கிளைமாக்ஸ் காட்சி இழுவை.

அதிரடியான அறிமுகப் பாடல், புத்திசாலித் தனமான சண்டைக் காட்சிகள், ஸ்டைலான தோற்றம் என்று கமர்ஷியல் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் ஈடுபாடு காட்டிவரும் சந்தானத்தை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது. எந்த வகைக் கதையாக இருந்தாலும் அவரது பலம் நகைச்சுவை வசனங்கள்தான். அது இந்தப் படத்திலும் அவருக்குக் கைகொடுக்கிறது. மனிதர்கள், பேய்கள் என்று சகட்டு மேனிக்கு எல்லோரையும் கலாய்க்கும் சந்தானம் நடனம், சண்டை, நாயகனுக்கான தோற்றம் ஆகியவற்றிலும் தேறுகிறார்.

அறிமுக நாயகி ஷனாயா மார்வாடிப் பெண் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். எனினும் அவர் பாத்திரமோ நடிப்போ சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்தவனுக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதா என்று நறநறவென்று பல்லையும் தமிழையும் கடிக்கும் மார்வாடி கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் பாலிவுட்டின் சவுரவ் சுக்லா.

மொட்டை ராஜேந்திரனின் நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். தனது உதவியாளர்களை ஆவிகளாக நடிக்க வைக்கும் இவர், நிஜமான ஆவியிடம் சிக்கிக்கொண்டு படும் பாடு ரகளை. கருணாஸ், ஆனந்த்ராஜ் போன்றவர்கள் படத்தைக் கலகலப்பாக்கப் பெரிதும் உதவுகிறார்கள்.

தீபக் குமாரின் ஒளிப்பதிவு, காதல், ஆவி, சதி, சண்டை என எல்லாம் கலந்த கதைக்கு முதுகெலும்பாக இருக்கிறது. குறிப்பாகக் காட்டுப் பகுதியில் பேய்கள் துரத்தும் காட்சியில் ஒளிப்பதிவு சிறப்பு. பழைய காலத்து மலை பங்களா, சென்னையின் நவீன பங்களா, நாயகனின் குடியிருப்பு, திபெத்திய சாமியாரின் குடில் ஆகியவற்றைச் சித்தரித்த விதத்தில் படத்துக்கு நம்பகத்தன்மையைக் கொண்டுவருகிறார் கலை இயக்குநர் மோகன் ஆர். இரண்டாவது பாதியில் கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு கச்சிதம்.

பின்னணி இசையில் கார்த்திக் ராஜா மிரட்டுகிறார். தமன் இசையில் பாடல்களில் சுரத்தில்லை.

நகைச்சுவையையும் பீதியையும் கலந்து தரும் படங்களின் வரிசையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர். முதல் பாதியில் கவனம் கூட்டியிருந்தால் சிறந்த பொழுதுபோக்குப் படமாக இருந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in