

நடிகை ராதாவிடம் மோசடி செய்ததாக எழுந்துள்ள விவகாரத்தை தொடர்ந்து தொழில் அதிபர் பைசூலின் பாஸ்போர்டை போலீஸார் முடக்கியுள்ளனர்.
‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ராதா. இவர், சினிமா பைனான்சியர் பைசூல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். “பைசூலும் நானும் 5 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். என்னிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை பைசூல் மோசடி செய்து வாங்கி விட்டார்.
இதுபற்றி நான் கேட்டதற்கு, படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை மீட்டு தரவேண்டும்” என்று தனது புகார் மனுவில் ராதா குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணைக்கு வருமாறு பைசூலுக்கு சம்மன் அனுப்பினர். நடிகை ராதா தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாகவும், அவரைப் பற்றிய உண்மைகளை வெளியிடுவேன் என்றும் பைசூல் கூறினார். இதற்கிடையில், போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கேட்டு 2 முறை சென்னை செசன்ஸ் கோர்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, நடிகை ராதா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரிடம் மீண்டும் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், பைசூல் சாட்சிகளை கலைக்கவும், தன் மேல் பொய் புகார் அளிக்கவும் முயற்சிக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வடபழனி போலீஸார், பைசூல் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளனர். அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கூடிய விரைவில் பைசூல் கைது செய்யப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.