அவள் அப்படித்தான் இயக்குநர் ருத்ரையா காலமானார்

அவள் அப்படித்தான் இயக்குநர் ருத்ரையா காலமானார்
Updated on
1 min read

தமிழ் திரைப்படத்துறையின் பழம் பெரும் இயக்குநர் சி.ருத்ரய்யா (67), சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சி.ருத்ரய்யாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான “அவள் அப்படித்தான்” என்ற திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், பிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த அந்த படம், இந்தியாவில் வெளியான மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட ருத்ரய்யா, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருக்கு ஒரு மகள் உண்டு. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். தனது இறுதிக் காலத்தை சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.

திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, பாலச்சந்தரின் உதவியாளராகவும் இருந்த ருத்ரையா இயக்கிய முதல் படம் 'அவள் அப்படித்தான்'.

கமல்ஹாசனின் சிவப்பு ரோஜாக்கள் வெளியான அதே நாளில் 'அவள் அப்படித்தான்' படமும் வெளியானது. சிவப்பு ரோஜாக்களின் மெகா ஹிட் 'அவள் அப்படித்தான்' படத்தை ரசிகர்கள் கண்களில் இருந்து மறைத்துவிட்டது.

அந்த பரபரப்பு அடங்கிய பின்னர் 'அவள் அப்படித்தான்' படம் ரசிகர்கள் கண்களில் பட அமோக வரவேற்பை பெற்று 100 நாட்களை கடந்தது.

ருத்ரையா தமிழ் திரையுலகிற்கு தந்த மற்றொரு படம் கிராமத்து அத்தியாயம், ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஆத்து மேட்டுல என்ற பாடல் மட்டும் பிரபலமடைந்தது.

தமிழ் திரைப்பட ரசிகர்கள் ருத்ரையாவை என்றும் நினைவுகூர அவள் அப்படித்தான் என்ற ஒரு படம் மட்டுமே போதுமானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in