

திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சி குறித்து உறுதி செய்து ஒப்புதல் வழங்குவதே சௌந்தர்யாவின் பணி. ஜல்லிக்கட்டு சர்ச்சைக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சௌந்தர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் நல்லெண்ண தூதராக செளந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டு இருக்கிறார். நியமன அறிவிப்பு வெளியானதில் இருந்து, தமிழகத்தில் இருந்து சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விலங்குகள் நல வாரிய விளம்பர தூதராக செளந்தர்யா ரஜினிகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு முழு காரணமாக செயல்பட்ட விலங்கு நல வாரியத்தின் உறுப்பினராக செளந்தர்யா சேர்ந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பில் செளந்தர்யா பதவி விலகக்கோரி அவரது படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செளந்தர்யா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "செளந்தர்யா ரஜினிகாந்த் பணி என்னவென்றால் திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான். அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவரை விலங்குகள் நல வாரியம் இப்பணியில் அமர்த்தியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பு இது இல்லை " என்று தெரிவித்துள்ளனர்.