

இரண்டாவது முறை தேசிய விருது பெறுவதை கவுரவமாகக் கருதுகிறேன் என்று தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருது தனஞ்ஜெயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து தனஞ்ஜெயன், "இரண்டாவது முறை தேசிய விருது பெறுவதை கவுரவமாகக் கருதுகிறேன். தமிழ் சினிமா விமர்சனங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். தமிழ் ஊடக குழுமங்களுக்கு, சேனல்களுக்கு தந்து வருகிறேன்.
எனது விமர்சனங்களைத் தொகுத்து அதை தேசிய விருது தேர்வுக்காக அனுப்பினேன். என்ன சிறந்த விமர்சகராக தேர்வு செய்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் சிலவற்றுக்கு நான் தீர்வுகளும் தந்துள்ளேன்.
இந்த தருணத்தில் எனக்கு ஆதரவு அளித்த பத்திரிகை ஊடகங்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவுக்காக இத்தகைய விருதை வென்றதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார் தனஞ்ஜெயன்.