காதல் திருமணம்தான் செய்வேன்: ஸ்ருதிஹாசன் நெத்தியடி

காதல் திருமணம்தான் செய்வேன்: ஸ்ருதிஹாசன் நெத்தியடி
Updated on
1 min read

‘பூஜை’ படத்தைத் தொடர்ந்து விஜய் - சிம்புதேவன் இணையும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என்று பறந்து பறந்து நடித்துக்கொண்டிருக்கும் அவரை சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம்.

உங்களைப் பற்றி வரும் சர்ச்சைகளை எப்படி கையாள்கிறீர்கள்?

என்னைப் பற்றி இதுவரை வந்த ஒரே சர்ச்சை, ‘நான் ‘ரேஸ் குர்ரம்’ படத்தில் கவர்ச்சியாக நடித்தேன்’ என்பதுதான். அது எனது கதாப்பாத்திரம். உங்களுக்கு பார்க்க இஷ்டம் இல்லையென்றால் பார்க்காதீர்கள். டி-டே படத்தில் நீங்கள் பார்த்தது எனது கதாப்பாத்திரம்தான். அது நான் இல்லை. அதே போல நான் நடிக்கும் கதாபாத்திரங்கள் என்ன கேட்கிறதோ, நான் அதுபோலதான் நடிப்பேன்.

தமிழில் இதுவரை நடித்த பாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாத்திரம் எது? எந்த விதமான பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

தமிழில் இதுவரை நடித்ததில் ‘3’ எனக்கு மிகவும் பிடித்த படம்.கமர்ஷியல் படங்களுக்கும் கமர்ஷியல் அல்லாத படங்களுக்கும் இடையே நான் பெரிய வித்தியாசத்தை பார்ப்பதில்லை. எனக்கு கதையும், அதில் எனது பாத்திரமும் பிடித்திருந்தால் போதும். நடிக்க ஒப்பந்தமாகிவிடுவேன்.

நீங்கள் கவர்ச்சியாக நடிப்பது பற்றி, உங்கள் தந்தை ஏதாவது கூறியதுண்டா?

அவர் அதுபற்றி எதுவும் கூறியதில்லை. எனக்கு எனது உடம்பு ஒரு கோயில் போல. எனது உடம்பை ஆபாசமான முறையில் மற்றவர்கள் பார்த்தால், அது என் பிரச்சினை இல்லை. அது அவர்களின் பிரச்சினை. மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது.

நீங்கள் பெண்ணாதிக்கவாதியா?

அப்படி இல்லை, ஆண்களை எதிர்த்து பேசுவது அவர்களோடு சண்டைபோடுவது போன்ற வேலையெல்லாம் செய்யாமல், சமூக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. என் அம்மா ஒரு தைரியமான பெண். என்னையும் அப்படித்தான் வளர்த்துள்ளார். என் வீட்டில் எனக்கு சுதந்திரம் அதிகம்!

நீங்கள் நடித்த நாயகர்களில் உங்களுக்கு நெருங்கிய தோழர் யார்?

குறிப்பிட்டு சொல்லும்படி யாரும் இல்லை. அனைவருமே எனக்கு நண்பர்கள்தான். அப்படி இருக்கும்போது ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்வது தவறு.

உங்களுடைய திருமணம் காதல் திருமணமாக இருக்குமா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருக்குமா?

கண்டிப்பாக காதல் திருமணம்தான் செய்வேன். என்னை மணப்பவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். அறிவாளியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவருக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in