

சித்தார்த் நடித்து, தயாரித்திருக்கும் 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம், பிப்ரவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜில் ஜங் ஜக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் சித்தார்த். முழு படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்து விட்டன. இப்படம் நாயகியே இல்லாமல் உருவாகும் 'டார்க்' காமெடி வகை படமாகும்.
இப்படத்தை தீரஜ் வைத்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 14ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரையும், அதனைத் தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு பாடலையும் இணையத்தில் வெளியிட்டனார். ஏற்கெனவே டிசம்பர் 24ம் தேதி 'ஜில் ஜங் ஜக்' வெளியாகும் என்று சித்தார்த் அறிவித்திருந்தார்.
சென்னையில் ஏற்பட்ட கனமழை காரணமாக இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் சித்தார்த்.
இந்நிலையில், "பிப்ரவரி 12ம் தேதி 'ஜில் ஜங் ஜக்' வெளியாகும். இப்படம் வெளிக் கொண்டு வருவதில் சந்தோஷமாக இருக்கிறது" என்று சித்தார்த் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் நடித்திருக்கும் 'அரண்மனை 2' திரைப்படம் ஜனவரி 29ம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.