

கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் 'குறள் 388' மூலம் தமிழிலும் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் விஷ்ணு மஞ்சு.
தெலுங்கு முன்னணி நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடிகராக நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை.
தற்போது கார்த்திக் இயக்கவுள்ள புதிய படத்தின் மூலம், தமிழிலும் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் விஷ்ணு மஞ்சு. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.
சுரபி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஹைதராபாத், சென்னை மற்றும் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
'குறள் 388' என்று இப்படத்துக்கு பெயரிட்டுள்ளார்கள். திருக்குறளில் 388-வது குறளில் இப்படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறது என்கிறது படக்குழு. தமிழ் பதிப்புக்கான வசனங்களை இரா.ரவிஷங்கர் எழுதியுள்ளார். இன்றைக்கு இருக்கும் தமிழக அரசியல் சூழலின் மக்களின் பிரதிபலிப்பாக இப்படம் அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படம் குறித்த அறிவிப்பை மோகன்பாபுவின் பிறந்த நாளன்று, இளையராஜா அறிமுகப்படுத்தி வைத்தார்.