

பி.வாசு இயக்கத்தில் ஷக்தி நடிப்பில் வெளியான 'தொட்டால் பூ மலரும்' படத்தில் மிகப் பிரபலமான காமெடி 'வரும்.. ஆனா வராது'. இதில் வடிவேலு மற்றும் என்னத்த கன்னய்யா இருவரும் நடித்திருப்பார்கள். இப்போதும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி திரையிடப்படும் காமெடியில் ஒன்றாகவும் இருக்கிறது.
இந்தக் காமெடி உருவானது எப்படி தெரியுமா?
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே நடித்து வருவதால் இயக்குநர் பி.வாசுவுக்கு என்னத்த கன்னய்யாவைத் தெரியும். 'தொட்டால் பூ மலரும்' படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று அழைத்து பேசியிருக்கிறார் பி.வாசு.
"இப்ப வாய்ப்புகள் எல்லாம் எப்படி வருதுண்ணே" என்று பி.வாசு கேட்க, "அதுவா.. வரும். ஆனா வராது. ஒரே நாளில் 2 படங்களில் கூட கூப்பிடுவார்கள். இப்போது கூட பாரு.. நீ கூப்பிட்ட.. வந்துட்டு இருக்கேன் ஒருவர் போன் பண்ணி ஒரு கேரக்டர் இருக்குனு கூப்பிட்டான். அதான் ஒரே நாளில் மொத்தமா வரும்.. இல்லன்னா வராது" என்று தெரிவித்திருக்கிறார் என்னத்த கன்னய்யா.
அவர் பேசும் போது வரும் மற்றும் வராது ஆகிய வார்த்தைகளை அக்காமெடியில் பேசுவது போலவே பேசியிருக்கிறார். அது இயக்குநர் பி.வாசுவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உடனே அந்த வார்த்தைகளை வைத்து ஒரு காமெடியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு சமயத்தில் கூட வயதாகிவிட்டதால், சொன்ன வசனத்தை அடிக்கடி மறந்துவிடுவார் என்னத்த கன்னய்யா. அப்போது வடிவேலு தான் காருக்கு பின்னால் படுத்துக் கொண்டே வசனத்தை சத்தமாக சொல்ல என்னத்த கன்னய்யா நடித்துக் கொடுத்திருக்கிறார்.