சதுரங்க வேட்டை 2-க்காக அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை
'சதுரங்க வேட்டை' 2-ம் பாகத்தில் நாயகனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் 'சதுரங்க வேட்டை'. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
'சதுரங்க வேட்டை' படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 'சதுரங்க வேட்டை 2' படத்தின் பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், அப்படத்தின் துவக்கம் தாமதமானதால் முழுக்கதையையும் 'சதுரங்க வேட்டை' படத்தை தயாரித்த மனோபாலாவிடம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வினோத்.
அக்கதையில் நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனம். விரைவில் இப்படத்தில் கையெழுத்திடுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். இப்படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
மேலும், 'சதுரங்க வேட்டை' இயக்குநர் வினோத் தனது படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டிவருகிறார். இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
