

விஜய் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜில்லா' நாளை உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான பணிகளை படக்குழு படுதீவிரமாக செய்து வரும் வேளையில், சிவில் நீதிமன்றத்தில் 'ஜில்லா' படத்திற்கு தடைக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் படக்குழு கடும் அதிர்ச்சியில் இருக்கிறது.
சோலையூரைச் சேர்ந்த ஆர். மகேந்திரன் என்பவர் 16வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில்,
"சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். ‘ஜில்லா’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் டி.வித் தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்தேன்.
தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளேன். இந்த படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன்.
இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10ம் தேதி வெளியாகப் போவதாக பத்திரிக்கையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். " என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'ஜில்லா' படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் வருகிறது.
நாளை (ஜன.10) வெளிவர இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், விஜய் ரசிகர்கள் என அனைவருமே இந்த வழக்கின் தீர்ப்பாக காத்திருக்கிறார்கள்.