

ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அருவி'க்கு கிடைத்த வரவேற்பால் தயாரிப்பாளர் பிரபு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
'மாயா' படத்தைத் தொடர்ந்து 'காஷ்மோரா', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்திருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'அருவி' என்ற புதிய படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதற்கு பிறகு தமிழகத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் திரைப்பட விழாவில் 'அருவி' திரையிடப்பட்டது. இப்படத்தை புதுமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் 'அருவி' திரையிடலில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய தயாரிப்பாளர் பிரபு, " 'அருவி' எப்போதுமே என்னை பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு படைப்பு. ஒரு சிறப்பான அனுபவத்தை அளித்துள்ளது ’அருவி’.
பல்வேறு திரைப்பட விழாக்களிலும் ’அருவி’ தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. முற்றிலும் உள்ளூர் உணர்வுகளால் பின்னப்பட்ட காட்சிகளை சர்வதேச பார்வையாளர்கள் ரசனையுடன் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படிப்பட்ட ஓர் அற்புதமான படைப்பை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த குழுவுக்கு என மனமார்ந்த நன்றி." என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.