"ஜோதிகா இடத்தைப் பிடிக்கணும்" : நிரஞ்சனா

"ஜோதிகா இடத்தைப் பிடிக்கணும்" : நிரஞ்சனா

Published on

கேரளச் சீமையிலிருந்து தமிழ்த்திரையில் நடிப்புக் கவிதை எழுத வந்திருக்கிறார், நிரஞ்சனா. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஹீரோ ஸ்ரீயுடன் ‘சோன்பப்டி’, ‘அங்காடித்தெரு’ மகேஷுடன் ‘யாசகன்’என்று இரண்டு படங்களை சமர்த்தாக முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறார். வீட்டில் அம்மா, அக்காக்களுடன் செல்லச் சண்டை போட்டுக் கொண்டிருந்தவரை சமாதானப்படுத்தி பேட்டியைத் தொடங்கினோம்.

பயங்கர குறும்புப்பெண்ணா இருப்பீங்க போல?

சே..சே. இதெல்லாம் சும்மா ஜாலிக்காக. நமக்கு பிடிச்சவங்ககிட்ட த்தானே சண்டை பிடிப்போம். அதுவும் அம்மா, அக்காக்களோடு வீட்டில் இருந்துவிட்டால் எப்பவும் இப்படித்தான். ஆனால், எவ்வளவு சண்டை போட்டாலும் ஒரு நிமிஷத்துக்கு மேல் என்னால் அவங்ககிட்ட பேசாம இருக்க முடியாது.

‘யாசகன்’ படத்தில் உங்களோட வொர்க்கிங் ஸ்டில்ஸ் பார்த்தால் கொஞ்சம் கிராமத்து மணம் வீசுகிறதே. ‘சோன்பப்டி’ எப்படி?

‘சோன்பப்டி’ முழுக்க சென்னையை களமாகக்கொண்ட படம். ஆபீஸ் போகும் பெண்ணா வர்றேன். ‘யாசகன்’ படத்தில் மதுரைப் பெண்ணா வருவேன். அதனால தாவணி, பாவாடை எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க சுடிதார் காஸ்ட்யூம்ஸ்தான். அதை கிராமத்து பின்னணி படம் என்று சொல்ல முடியாது. அப்படி இருந்தாலும் எனக்கு ஏத்த மாதிரி இருக்கும். என்னோட சொந்த ஊரே கேரளா வயநாடுதான். மலைப்பாங்கான பகுதி. பள்ளிக்காலங்கள் வரை அங்கேதான் சுற்றித்திரிந்தேன். ரொம்ப நல்ல கிளைமேட். இப்போக்கூட கொஞ்சம் கொஞ்சம் சொந்த ஊரை இழக்கிறோமே என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படுகிறது.

இனி நடிப்புத்துறைதான் என்று முடிவெடுத்து விட்டீர்கள். அதற்கு உடலை பிட்டாக வைத்திருப்பது அவசியமாச்சே?

‘யாசகம்’ படத்தின்போது கொஞ்சம் வெயிட் போட்டுத்தான் இருந்தேன். யார் என்ன சொன்னாலும் சாப்பாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடே இல்லை. ஷூட்டிங் போகப்போக உடம்போட பிட்னஸை ஒரு அளவுக்குள் கொண்டு வந்தேன். அதுக்கு முக்கிய காரணமே ஸ்கிப்பிங்தான். நிஜமாகவே ஸ்கிப்பிங் நல்ல ரிசல்ட் கொடுக்கும். இப்பவும் பிடித்த சாப்பாடு என்றால் கொஞ்சமும் யோசிப்பதே இல்லை. நல்லா சாப்பிடுவேன். நம்மகிட்ட ஸ்கிப்பிங் பயிற்சி இருக்கே என்கிற தைரியம்தான் காரணம்.

கருப்பு வெள்ளைப்படங்கள் எல்லாம் பிடிக்குமா?

பழைய படங்களில் சிலவற்றை பார்க்கும்போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருக்கிறமாதிரி இருக்கும். ஆனால், அந்த நடிப்பை அப்படி ரசிக்கலாம். கருப்பு, வெள்ளை கால நாயகிகள் எல்லாம் தேவதை மாதிரி அவ்வளவு அழகா தெரிவாங்க. சின்ன வயதில் இருந்தே நிறைய படங்களா பார்த்து வளர்ந்த பெண், நான். இப்போக்கூட மலையாளத்தில் மஞ்சு வாரியார், ரேவதி, ஷோபனா இவங்களோட நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கும். தமிழில் எப்பவுமே எனக்கு ஜோதிகாதான் பிடித்த நடிகை. அவங்க இடத்தை எப்படியும் பிடித்தே ஆகணும். எந்த ரோலுக்கும் அவங்க அவ்வளவு பொருத்தமாக இருப்பாங்க. இப்ப அவங்க சினிமாவில் இல்லாம இருந்தாலும் அவங்களோட படங்கள் பத்தின என்னோட பிரண்ட்ஸ் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

மேக்கப், காஸ்ட்யூம்ஸ்?

சிம்பிள் மேக்கப்தான். ஷூட்டிங் தவிர்த்த நேரங்கள் போக எப்பவும் மேக்கப் பாக்ஸை திறக்கவே மாட்டேன். காஸ்ட்யூம்ஸ் பிளாக் அண்ட் வொயிட் டிரெஸிங்தான். ஷாப்பிங் போகும்போதே இந்த முறை பிளாக் அல்லது வொயிட் கலர் இல்லாத காஸ்ட்யூம்ஸ் தேர்ந்தெடுக்கணும்னு போவேன். முடியவே முடியாமல் திரும்புவேன். எதாவது ஒரு டிரெஸ் அந்த கலர்ஸ்ல அமைந்துடும். அப்படி ஒரு பாதிப்பான கலர்ஸ் பிளாக் அண்ட் வொயிட்.

மலையாள படங்களில் நடிக்க மாட்டீங்களா?

இப்போக்கூட தீவிரமா கதை கேட்டுக்கொண்டு தான் இருக்கேன். சமீபத்தில் வந்த ‘திரிஷ்யம்’ ரொம்பவே பிடித்தப்படமாக இருந்தது. இதுமாதிரி நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in