ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டம்: அஜித் பங்கேற்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தின் மவுனப் போராட்டம்: அஜித் பங்கேற்பு
Updated on
1 min read

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கத்தின் போராட்டத்தில் அஜித் பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் ஒற்றுமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் மவுனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்துக்கு நடிகர், நடிகைகளை தவிர வேறு யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாருமே ஒளிப்பதிவு செய்ய வர வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, சத்யராஜ், ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதி வழியில் மவுனப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் பங்கேற்றுள்ளார்.

மேலும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in