Last Updated : 16 Aug, 2016 06:07 PM

 

Published : 16 Aug 2016 06:07 PM
Last Updated : 16 Aug 2016 06:07 PM

கெளதமியுடன் கருத்து வேறுபாடா? - ஸ்ருதி தரப்பு விளக்கம்

'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'சபாஷ் நாயுடு'. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை கமலே ஏற்றுக் கொண்டார். அமெரிக்காவில் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பின் போது கெளதமி - ஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அதில், "ஸ்ருதி ஒரு ஃபேஷன் பிரியை. அதனால் அவரது படங்களிலும் கூட அது பிரதிபலிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதேவேளையில் தயாரிப்பாளர், இயக்குநருடன் இணைந்தே தன்னுடைய தோற்றம் ஆடைகளை அவர் இறுதி செய்கிறார். அப்படித்தான் அவரது தந்தையின் படத்திற்கும் அவர் மெனக்கெட்டிருக்கிறார்.

'சபாஷ் நாயுடு'வில் ஸ்ருதியின் கதாபாத்திரம் வித்தியாசமானது. ஒரு ஃபேஷனபிள் இளம் பெண். குறும்புக்கார பெண். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளர்ந்த கவலைகள் அறியா பெண்ணாக நடிக்கிறார். இதை மனதில் கொண்டு கெளதமி சில ஆடைகளை ஸ்ருதிக்காக வாங்கினார். ஆனால், வழக்கம்போல் அந்த ஆடை அலங்காரப் பொருட்கள் பற்றி தயாரிப்பாளர் மற்ற கலைஞர்களுடன் ஆலோசித்தபோது ஸ்ருதிக்கு அந்த ஆடைகளை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால் ஆடைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. கெளதமியும் அதை ஏற்றுக் கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திரைக்குப் பின்னர் அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்து திரையுலகில் ஒருவர் "ஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஸ்ருதிக்கும் கமலுக்கும் இடையில் அன்பும் திறந்த மனப்பான்மையும் கொண்ட உறவு நிலவுவதால் அவர்கள் குடும்பத்தில் கெளதமியையும் ஏற்றுக் கொண்டனர். ஸ்ருதி தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய போது, அதில் கெளதமியும் பங்கேற்றுக் கொண்டார். இதிலே அவர்களுடைய உறவு எப்படிப்பட்டது என்று தெரிந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x