

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'நரகாசுரன்' படத்திலிருந்து நாக சைதன்யா விலகியுள்ளார். ஸ்ரேயா மற்றும் இந்திரஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
'துருவங்கள் 16' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் கார்த்திக் நரேன். தனது அடுத்த படம் 'நரகாசுரன்' என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும், இதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு நாயகர்கள் நடிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார் கார்த்திக் நரேன்.
தமிழிலிருந்து அரவிந்த்சாமி, தெலுங்கிலிருந்து நாக சைதன்யா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களின் தேதிகளால், தற்போது நாக சைத்தன்யா 'நரகாசுரன்' படத்திலிருந்து விலகியுள்ளார்.
மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்ரேயா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்மறையான கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.
'நரகாசுரன்' படத்தை கார்த்தி நரேன் மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தது.