

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ‘இன்னொரு வருடம் தமிழ் சினிமாவில் கடந்தது. புதிய படங்களின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு 162 என்ற எண்ணிக்கையிலிருந்து 166-ஆக 2013-ல் உயர்ந்தது; ஆனால் வெற்றிகள் மட்டும் அதே அளவில் (10 சதவீதம்) தொடர்கிறது.
பாக்ஸ் ஆபீசில் வசூல் வெற்றி பெற்று, தயாரிப்பா ளர்களுக்கு நிஜமான லாபம் சம்பாதித் தவை 16 முதல் 18 படங்களுக்கு மேல் இல்லை என்கின்றன பெரும்பாலான தகவல்கள். புதிய படங்களின் எண்ணிக் கையோடு வெற்றிப் படங்களின் எண்ணிக் கையையும் உயர்த்த வழி என்ன என்று விவாதிக்கப்படுகின்றன. ஆனால் இன்னமும் அவை அமல்படுத்தப்பட வில்லை.
இந்த ஆண்டிலாவது தயாரிப்பாளர் களும், இயக்குநர்களும் இணைந்து சில நல்ல முயற்சிகள் எடுத்தால், இந்த வெற்றியின் சதவீதத்தை உயர்த்த முடியும்
வெளியீட்டு வழிமுறைகள்
டிஜிட்டல் மயமான பின் புதுப் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கும். 2013ல், 300 படங்களுக்கு மேல் சென்சார் ஆகியுள்ளன. பணம் முதலீடு செய்யத் தயாராகும் அனைவரும் தயாரிப்பாளர் ஆகலாம். யாரும் தடுக்க முடியாது. ஆனால், ஒரு தொழில் நன்றாக, வளமாக இயங்கச் சில கட்டுப்பாடுகள் அவசியம். குறைந்த அளவே தியேட்டர்கள் உள்ள தற்போதைய நிலைமையில், பண்டிகை வாரங்களில் மூன்று, பிற வாரங்களில் இரண்டு படங்களுக்கு மேல் வெளியிட அனுமதிக்கக் கூடாது.
கேரளத்தில் உள்ளது போல, வெளியாகும் தியேட்டர்களின் எண் ணிக்கையில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் நல்லது. அதிகப் பட்ஜெட் கொண்ட படங்களுக்கு 300 தியேட்டர்களும், மீடியம் பட்ஜெட் படங்களுக்கு 200 தியேட்டர்களும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு 100 தியேட்டர்களும் ஒதுக்கி ரிலீஸ் செய்ய வேண்டும்.
ஒரு பெரிய படம் அதிக எண்ணிக்கையில் தியேட்டர்களை வசப்படுத்த மற்ற படங்களுக்குச் சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இதனால் தவிர்க்கப்படும்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு, சிறிய அளவில் இருக்கைகள் கொண்ட (300 முதல் 400 அளவு) தியேட்டர்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது சிறிய பட்ஜெட் படங்களை ஊக்குவிக்க உதவும்.
காப்புரிமை மீறல்
தமிழ் சினிமாவில் காப்புரிமை மீறல் (பைரஸி) எந்த அளவு பாதித்து வருகிறது என்பதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. அரசாங்கம் சில நல்ல சட்டங்களைக் கொண்டுவந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் அச்சட்டங்களின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. திருட்டுப் பிரதிகளால் படத்தின் வருவாய் பாதிக்கப்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே சட்டங்களினால் அதிகப் பயன் இருப்பதில்லை.
பைரஸி மூலம், தமிழ் சினிமாவின் தியேட்டர் வருவாய் ஒரு சராசரி படத்திற்கு 30 முதல் 40 சதவீதம் அளவிலும், வெற்றிப் படத்திற்கு 50 சதவீதத்திற்கு மேலும் பாதிப்படைவதாகச் சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
ஆன்லைன் பைரஸி இன்று எல்லா இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று, அனைவரும் ஒரு புதுப் படத்தைக் காசே கொடுக்காமல் வெளியான ஓரிரண்டு நாட்களில் பார்க்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் தியேட்டர் வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
ஒரு படம் வலை தளம் மூலம் எல்லா வீடுகளுக்கும் நேரடியாகக் கிடைப்பதால், தியேட்டர் அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே தியேட்டர் வருகிறார்கள்.
ஒரு புதுப் படத்தைத் தியேட்டரில் மட்டுமே குறைந்தது நாலு வாரங்களுக்குக் காண முடியும் என்ற நிலைமையைக் கேரளத்திலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் சினிமா சங்கங்களும், அரசாங்கங்களும் ஏற்படுத்தியுள்ளன. அந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை.
அரசாங்கமும், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, மற்ற மொழி சங்கங்கள்போல, ஆன்லைன் பைரஸியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தியேட்டர் வசூலைப் பெருக்க முடியும்.
வீணான விளம்பரச் செலவுகள்
இன்று ஒரு படத்தின் தயாரிப்பு செலவைக்கூட ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் விளம்பரச் செலவுகளின் அளவு, எல்லையைக் கடந்து செல்கிறது. மற்ற மூன்று தென்னிந் திய மொழிச் சங்கங்கள் சரியான கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து, விளம்பரச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துள்ளன. தமிழ் சினிமாவில் மட்டும், சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்புச் செலவுக்கு இணையாக அல்லது இரு மடங்காக விளம்பரச் செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அனைவருக்கும் ஒரு சமமான வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த விளம்பரச் செலவுகளில் பல வீணானவை என்பதுதான் வேதனை. ஒரு நல்ல படத்திற்குப் பார்வையாளர்களே பெரும் விளம்பர ம் செய்வார்கள் என்பதும், ஒரு மோசமான படத்திற்கு எத்தனை விளம்பரம் செய்தாலும் பலன் இருக்கப் போவதில்லை என்பதும் நாம் காலம் காலமாகக் கண்டுவரும் உண்மை. ஒரு சராசரி அல்லது மோசமான படத்தை அதிக விளம்பரங்கள் மூலம் மக்களிடம் சேர்த்துவிட முடியும் என்ற திட்டம், சில படங்களுக்கு வெற்றி யைக் கொடுக்கலாம். அவைகள் விதி விலக்கானவை. பல படங்களுக்கு அது தோல்வியையே தரும் என்பதை நாம் கண்டுவருகிறோம்.
சரியான விளம்பரக் கட்டுப்பாடுகளை விதித்து, அதை அனைவரும் பின்பற்ற வழிமுறை செய்தால், இருபது வருடங்களுக்கு முன்பு இருந்தது போல, ஒரு நல்ல படம் தானாகவே அதன் வெற்றியைப் பெறும்; லாபத்தைக் கூட்டும். ஒரு சராசரி அல்லது மோசமான படத்திற்கு, அதன் தரத்திற்கேற்ப வசூல் கிடைக்கும்.. விளம்பரச் செலவுக் கட்டுப்பாடுகள் அத்தகைய படங்களின் இழப்பையும் கட்டுக்குள் வைக்கும்.
ஆடியோ, வீடியோ, வெளிநாட்டுக் காப்புரிமைகள் மற்றும் திரையரங்க எண்ணிக்கைகள் விஷயத்தில் தேவைப்படும் மாற்றங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.
இங்கே முன்வைக்கப்படுபவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். அவர் சார்ந்த நிறுவனத்தின் கருத்துகளாக அவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.