Published : 24 Oct 2013 06:58 PM
Last Updated : 24 Oct 2013 06:58 PM

பாலாஜி சுடும் சுட்ட கதை !

ரேடியோ ஜாக்கி, பிரபல டிவி தொகுப்பாளர் என பிஸியாக இருந்தாலும், படங்களிலும் நடித்து வருகிறார் பாலாஜி. ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராசப் பட்டினம்’, ’நண்பன்’ போன்ற படங்களில் திறமை காட்டியவர், தற்போது 'சுட்ட கதை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு கண்டிப்பாக தனது திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவரிடம் பேசியதில் இருந்து..

'சுட்டகதை' படத்தில் என்ன ஸ்பெஷல்?

'சுட்ட கதை' படமே ஸ்பெஷல் தான். காமிக்ஸ் பின்னணியில் வரும் முதல் படம், இதுவரை சொல்லாத தளத்தில் படத்தின் கதையை கூறியிருக்கிறோம்.

சினிமாவில் இதுவரை சொல்லாத தளமா?

கண்டிப்பாக அனைத்து படங்களுமே கற்பனை கதைகள் தான். ஒரு சில படங்கள் தான் உண்மைக் கதைகளை மையப்படுத்தி வருகின்றன. அதில் கூட ஒரு சில கற்பனைக் காட்சிகள் இருக்கும்.

ஆனால் 'சுட்டகதை' படத்தில் 'கோரமலை' என்ற ஒரு கற்பனை நகரத்தையே உருவாக்கி இருக்கிறோம். உலகத்தில் எங்கும் அப்படியொரு இடம் கிடையாது. தமிழ் பேசும் மலை ஜாதி மக்கள் வசிக்கும் இடமாக அதை கதை களமாக்கி இருக்கிறோம்.

படத்தின் காட்சிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். படத்தின் டிரெய்லர்கள், டீஸர்களை நீங்கள் பார்த்தாலே இது புரியும். படத்தைக் கூட வித்தியாசமாக பல்வேறு தளங்களில் விளம்பரப்படுத்தி இருக்கிறோம்.

'சுட்ட கதை'யில் என்ன கேரக்டர்ல நடிக்கிறீங்க?

புத்தி குறைபாடுள்ள ஒரு போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். என்ன குறைபாடு என்பதை நீங்க படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.

நீங்க நாயகனாக நடிக்கும் முதல் படம் 'சுட்டகதை'. தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோ?

நாயகன் எல்லாம் பெரிய வார்த்தை. படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். முக்கிய வேடத்தில் நான் நடிக்கும் முதல் படம்னு சொல்லிக்கலாம்.

'சுட்டகதை' படத்துக்கு பிறகு ஹீரோவா மட்டும் தான் நடிப்பீங்களா?

நல்ல கேள்வி. இதுக்கு நான் ஒரு சின்ன ப்ளாஷ்பேக் சொல்றேன். 'பொய் சொல்லப் போறோம்', 'மதராசப்பட்டினம்', 'நண்பன்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'மாலை பொழுதின் மயக்கத்திலே', 'தாண்டவம்', 'சேட்டை' என பல படங்கள்ல நடிச்சுருக்கேன்.

சின்ன வேஷம், பெரிய வேஷம் அப்படினு எல்லாம் ஒண்ணும் கிடையாது. படத்துல என் கதாபாத்திரம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்னு பார்த்து படங்களை ஒத்துக்குறேன். நிறைய விஷயங்கள் புதுசு புதுசா பண்ணாத்தான் ஒரு நடிகனா நிலைச்சு நிக்க முடியும். மக்கள் இப்போ தான் என்னை ஒரு நடிகனா ஏத்துக்கிட்டாங்க.

'சுட்டகதை'க்கு அப்புறம் என்ன ப்ளான்?

'சுட்டகதை' படத்துக்கு பிறகு பத்ரி சார் இயக்கத்துல 'ஆடமா ஜெயிச்சோமடா' அப்படினு ஒரு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். ஒரு படத்துல வில்லனா நடிக்க இருக்கேன். எல்லா படங்களையும் கண்டிப்பாக பாலாஜி பேசப்படுவான் அப்படிங்கிற நம்பிக்கையிருக்கு.

'சுட்டகதை'ல உங்களோட நிறைய பேர் நடிச்சுருக்காங்க போல?

ஆமா.. வெங்கி, லட்சுமி ப்ரியா, ரின்சன், டோங்லி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ஜெய பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணா, சிவாஜி சந்தானம், ஜெயமணி அப்படினு நிறைய பேர் நடிச்சிருக்காங்க..

ஒரே படத்துல பல பிரபலங்கள் நடிக்கறது ஆரோக்கியமான விஷயம். அப்படிப்பட்ட படங்கள் ஜெயிச்சிருக்கு.. ஹாலிவுட்ல இது சர்வ சாதாரணமா நடக்கும்.. பாலிவுட்லயும் இப்ப பெரிய ஸ்டார்கள் ஒண்ணா சேர்ந்து நடிக்கறாங்க.. மலையாளப் படங்கள்லயும் இது சாத்தியமாகியிருக்கு.. இங்கேயும் நடக்கும்னு நம்பறேன். அதுக்கு தயாராவும் இருக்கேன்.

பட ரிலீஸ்க்கு ஏன் இவ்வளவு தாமதம்?

ஒரு படம் எடுத்து முடிச்சவுடனே ரிலீஸ் பண்ணிட முடியாது. அதுக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் இருக்கு. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தொடர்ச்சியா ரிலீஸாயிட்டே இருந்தது. ஆகஸ்ட்ல சென்சார் ஆன படத்தை இப்போ அக்டோபர்ல ரிலீஸ் பண்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x