

புதுமுக இயக்குநர் பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார், சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பூஜையுடன் தொடங்கியது.
'கிடாரி' படத்தைத் தொடர்ந்து, அடுத்து நடிக்கவிருக்கும் படமும் புதுமுக இயக்குநர் தான் இயக்கவிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார் இயக்குநர் சசிகுமார்.
அப்படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டு இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ரவி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்க இருக்கிறார். செப்டம்பர் 21ம் தேதி முதல் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இப்படத்தில் சசிகுமாருக்கு அடுத்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கோவை சரளா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமாருக்கு நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.