

தன் தர்மத்தின் மீது கையை வைத்தால் கோபம் வந்துவிடும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சதீஷ், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. அம்ரீஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வேந்தர் மூவிஸ் மதன் உலகமெங்கும் வெளியிட, தமிழக உரிமையை மட்டும் சிவபாலன் பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தன்னுடைய பேச்சில் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு லாரன்ஸ் பேசியது, "எனக்கு கோபம் அவ்வளவு எளிதாக வராது. பசி அதிகமாக வந்தால் வரும் மற்றும் என் தர்மத்தின் மீது கையை வைத்தால் கோபம் வந்துவிடும்.
தர்மத்தோடும், நியாயத்தோடும் 10 ஆண்டுகள் செய்து கொண்டிருக்கிற விஷயத்தை ஒருவர் குறை சொல்லிவிட்டால் உடனே கோபம் வந்துவிடும். அது தான் சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது.
10 வருடம் தர்மம் செய்தது இதற்குத் தானா? எனக் கேட்டார். நான் அரசியலுக்கு வருவேன் என சொல்லவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் ஆசைப்பட்டால் வருவோம் என்று சொன்ன விஷயத்தை மாற்றி எழுதிவிட்டார்கள். அந்த இடத்தில் நான் கோபப்பட்டதுக்கான காரணம் மிகச் சரியானது.
10 ஆண்டுகளுக்கு முன்பே விளம்பரப்படுத்தியிருந்தால், அதை விளம்பரம் எனக் கூறலாம். நான் வளர்த்த பையன் என் தோள் அளவுக்கு உயர்ந்து காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று சொல்கிறான். அதற்கு பேர் விளம்பரம் கிடையாது. நான் விளம்பரத்தை விரும்பாதவன். ஒரு வேளை நான் பேசியது தவறு என பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நாம் பேசியது தவறல்ல" என்று பேசினார்.