

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக ஒளிப்பதிவாளரின் ட்வீட்டிற்கு, பிரச்சன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இப்படை வெல்லும்'. கெளரவ் இயக்கியுள்ள இப்படத்துக்கு ரிச்சார்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைத்துள்ளார். முழுப் படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
'இப்படை வெல்லும்' படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வியன்னா நகரத்தில் அரசாங்கம் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கிறது. என்ன ஒரு சிந்தனை, அதை ஏன் நம் தேசத்தில் முயற்சிக்கக் கூடாது?" என்று ட்வீட் செய்தார்.
ரிச்சார்ட் எம்.நாதனின் ட்வீட்டிற்கு பதலளிக்கும் விதமாக அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு நடிகர் பிரசன்னா "ஆம். நாம் அதிகமாக குப்பை வீசுகிறோம். ஆனால் நமது அரசியல் குப்பையின் துர்நாற்றம் அதிகம் என்பதால் நமது வரிப்பணம் உபயோகமாக செலவாகாது. அதனால் இதை மறந்துவிட்டு வியன்னா பயணத்தை கொண்டாடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
'காலக்கூத்து', 'நிபுணன்', 'திருட்டு பயலே 2', 'துப்பறிவாளன்' மற்றும் தெலுங்கில் 'ஜவான்' உள்ளிட்ட படங்களில் பிரசன்னா கவனம் செலுத்தி வருகிறார்.