

புதுமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ள படத்துக்கு 'யங் மங் சங்' என பெயரிட்டுள்ளார்கள்.
'தேவி' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்காக பல்வேறு கதைகளைக் கேட்டுவந்தார் பிரபுதேவா. இதில் புதுமுக இயக்குநர் அர்ஜுன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே அதற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
'யங் மங் சங்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தங்கர்பச்சான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி, 'பாகுபலி' பிரபாகர் கலக்கேயா, சித்ரா லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார்கள். நாயகி தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.