

'குஷி 2' படத்தில் நாயகனாக விஜய் நடிப்பாரா என்ற கேள்விக்கு இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்திருக்கிறார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'குஷி'. தேவா இசையமைப்பில் வெளியான இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். 2000ம் ஆண்டு வெளியான இப்படத்தின் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனது 60வது படம் குறித்து பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார் விஜய். அப்போது எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய் கதை கேட்டார் என்று தகவல் வெளியானது. 'குஷி 2' படத்தை விஜய்யை வைத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதற்கு எஸ்.ஜே.சூர்யா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், 'குஷி 2' படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா "கதை தயாராக இருக்கிறது. தெலுங்கில் வேறு ஒரு நாயகனை வைத்து பண்ணிவிட்டு, தமிழில் நான் பண்ணலாம் என்று இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் விஜய்யுடன் பண்ணுவீர்களா என்ற கேள்விக்கு "'அது தெரியவில்லை. 'குஷி 2' என்ற பெயரில் அப்படம் இருக்காது. அந்த சாயலில் அப்படம் இருக்கும். விஜய் சார் வேறு ஒரு இடத்துக்கு சென்றுவிட்டார். அவர் பண்ணலாம், பண்ணினால் நன்றாகத் தான் இருக்கும். நான் மட்டும் இதனை திட்டமிட முடியாது. அனைத்தும் அமைய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மேலும், செல்வராகவன் இயக்கிவரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.