

'நேரம்' அல்லது 'ப்ரேமம்' இரண்டில் எதை இந்தியில் ரீமேக் பண்ணலாம் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாளத் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கிய 'நேரம்' மற்றும் 'ப்ரேமம்' இரண்டுமே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. 'ப்ரேமம்' திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை படைத்தது. சென்னையிலேயே சுமார் 100 நாட்களை கடந்து திரையிடப்பட்டது.
தனது அடுத்த படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் அல்போன்ஸ் புத்திரன். இதனிடையே இந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு அல்போன்ஸ் புத்திரனுக்கு அமைந்திருக்கிறது. எனவே ரசிகர்களிடம் 'நேரம்' அல்லது 'ப்ரேமம்' இரண்டில் எதை இந்தியில் ரீமேக் செய்யலாம் என தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஒரு ரசிகராக, எனது ’நேரம்’ அல்லது ’ப்ரேமம்’, எந்த திரைப்படத்தை இந்தியில் எடுப்பதை விரும்புவீர்கள்? நான் ரீமேக் செய்யமாட்டேன். அதை தழுவி புதியதாக மீண்டும் கதை சொல்லுவேன். எனவே சொல்லுங்க, பிரேமமா, நேரமா அல்லது வேறு புதிய சிந்தனையா, எதை இந்தியில் எடுக்கலாம்?
வெளிப்படையாக பேசுங்கள். நான் மூன்றாவது முறை இப்போது மும்பை வந்துள்ளேன். எனது அடுத்த படத்துக்கான பிரார்த்தனைகளும், ஆசிர்வாதங்களும், வெளிப்படையான விவாதங்களும் எனக்குத் தேவைப்படுகிறது." என்று குறிப்பிட்டு இருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன்.