

'துணிகரம்' இசை வெளியீட்டு விழாவில் புதுமுக இயக்குநர்களுக்கு குட்டிக்கதை கூறி அறிவுரை கூறினார் இயக்குநர் பேரரசு.
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'துணிகரம்'. இயக்குநர் பாலசுதன் இயக்கி தயாரித்துள்ளார். ஷான் கோகுல் மற்றும் தனுஜ் மேனன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன், நடிகர்கள் போஸ் வெங்கட் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இவ்விழாவில் பேரரசு பேசும்போது, தன்னுடைய பேச்சுக்கு இடையே இன்றைய இயக்குநர்களுக்கு குட்டிக் கதை கூறி அறிவுரை கூறினார்.
அதில், "ஒரு ராஜா. அவருக்கு மூன்று மகன்கள். தனக்குப் பின் யார் நாட்டை ஆள வேண்டும் என முடிவு செய்ய தனது மூன்று மகன்களையும் அழைத்து ஒரு போட்டி வைத்தார்.
‘காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்து மூவரும் ஆளுக்கொரு ஒரு ஏழைக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அந்த மூட்டையை என்னிடம் பிரித்துக் காட்டத் தேவையில்லை’ என உத்தரவிட்டார்.
மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல்பட்டுக் கொண்டு கீழே விழுந்த அழுகிய பழங்களே போதும் என மூட்டை கட்டினான். மூன்றாமவனோ ஏழைக்குத்தானே கொடுக்கப் போகிறோம் என அலட்சியத்துடன் கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டை கட்டினான்.
மூவரும் ராஜாவிடம் வந்து நிற்க, ராஜாவோ, "நீங்கள் இதை கொடுக்க வேண்டிய அந்த ஏழைகள் வேறு யாருமில்லை. நீங்கள்தான் அந்த ஏழைகள். இரண்டு வாரங்களுக்கு நீங்கள் கொண்டு வந்ததை நீங்களே சாப்பிடுங்கள்" என கூறி ஆளுக்கொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டார்.
நல்ல பழங்களை கொண்டு வந்தவன் நன்றாக சாப்பிட்டு சுகமாக இருந்தான். மற்ற இரண்டு பேரின் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்படித்தான் முதல் பட வாய்ப்பு கிடைக்கும் இயக்குநர்கள், ஏனோதானோவென்று அந்த நேரத்திற்கு வேலை பார்த்தால் அது அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும். நல்ல கதையாக தேர்வு செய்து படங்களை இயக்கினால் உங்களுக்கும் வாழ்வு. தயாரிப்பாளருக்கும் லாபம்" என்று பேசினார் இயக்குநர் பேரரசு.