ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை

ஆன்லைன் விமர்சகர்களுக்கு ரஜினி சொன்ன குட்டிக்கதை
Updated on
1 min read

ஆன்லைன் விமர்சகர்களுக்காக 'நெருப்புடா' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி ஒரு குட்டிக்கதையைக் கூறினார்.

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நெருப்புடா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திங்கட்கிழமை சென்னையில் உள்ள பிரபுவின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

இதில் ரஜினி குட்டிக்கதை கூறுகையில், ''விமர்சனம் செய்யும்போது சொல்கிற, பயன்படுத்துகிற வார்த்தை சரியாக இருக்க வேண்டும். வீட்டுக்கு சாப்பிட அழைத்து சாப்பிடு என்று சொல்வதற்கும் சாப்பிடு. நல்லா சாப்பிடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு ராஜா இருந்தார். அவருக்கு பிள்ளையே பிறக்கவில்லை. அவர் போகாத கோயில் கிடையாது, வணங்காத கடவுள் இல்லை. அவருக்கு 20, 30 வருடங்கள் கழித்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதனால் ரொம்ப சந்தோஷப்பட்ட ராஜா, எல்லோரையும் அழைத்து குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜாதகம் காட்டி ஜோசியம் பார்க்கச் சொன்னார்.

'நிச்சயம் உங்கள் மகனால்தான் உங்களுக்கு மரணம் நிகழப்போகிறது' என்று ஜோசியம் பார்த்த பலரும் சொன்னார்கள். 'இவன் உங்களை கொல்வான்' என்று எல்லோரும் ஒரேமாதிரி சொன்னார்கள்.

இதனால் கோபப்பட்ட ராஜா, ஜோசியம் சொன்ன அத்தனை பேரையும் சிறையில் தள்ளி, '10 நாட்களில் இவர்களின் தலையை எடுத்துவிடுங்கள்' என்று கட்டளையிட்டார்.

இவர்களைத் தவிர்த்து, இன்னொரு ஜோசியக்காரர் வந்தார். பெரிய ஜோசியக்காரர் என்பதால் ஏற்கெனவே நடந்ததைத் தெரிந்துகொண்டுதான் வந்தார். குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தார். 'நீயெல்லாம் பெரிய ராஜாவே கிடையாது. உன் குழந்தைதான் உன்னைவிட 10 மடங்கு பெரிய ராஜாவா இருப்பான். பேர், புகழ்ல உன்னை விட 100 மடங்கு இருப்பான். இந்த மாதிரி ஒரு ஜாதகத்தைப் பார்த்ததே கிடையாது.' என்றார்.

ராஜா மிகவும் மகிழ்ச்சியில், என்ன வேண்டுமானாலும் கேள் என்றார். சிறையில் இருக்கும் ஜோசியக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்றார் அந்த ஜோசியக்காரர்.

எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு உங்கள் மகன் தான் மரணத்துக்குக் காரணமாக அமைவான் என்று சொல்லக் கூடாது. ஆன்லைன் விமர்சகர்களும் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல வேண்டும்'' என்றார் ரஜினி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in