

இசை விழாக்களும் குளிரும் மார்கழிப்பூக்களும் ஆசிர்வதிக்கும் டிசம்பரில் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம் ரஜினிகாந்தின் பிறந்தநாள். டிசம்பர் 12ம் தேதி பிறந்தநாள் காணும் ரஜினி என்கிற சிவாஜிராவ் குறித்து 12 தகவல்கள்:
#ரஜினி ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி, சட்டையில் வருகிறார் என்றால் அன்று சென்டிமெண்டாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் அனிருத் சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்கு அவர் பட்டு வேட்டிச் சட்டையுடன் வந்து கலந்துகொண்டார். வேட்டி சட்டையைப் போலவே ரஜினி விரும்பும் மற்றொரு உடை கருப்பு சட்டை, கருப்பு பேண்ட்.
#ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சென்னையிலும் அதுபோல ஒரு உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்து நடத்த தீவிரமாக இருந்திருக்கிறார் ரஜினி. ஆனால் நண்பர்களின் ஆலோசனையால் அதை கைவிட்டார். இருப்பினும் அண்ணா ஹசாரேவை நேரில் சந்தித்து ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தார். அதுபோல சென்னையில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களது ஆதரவு வேண்டும் என்று அப்போது கேட்டு வந்திருக்கிறார்.
#‘16 வயதினிலே’ படப்பிடிப்பில் பலமுறை பாரதிராஜாவிடம் திட்டு வாங்கியிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் அவருக்கு ஒரே ஆறுதல், ஒல்லிப் பையனாக வசனக் குறிப்பேட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் பாரதிராஜாவின் உதவியாளர் பாக்யராஜ்தான். ‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்று சொல்லி, அவரை உற்சாகப்படுத்துவாராம் பாக்யராஜ்.
#செல்போன் பயன்படுத்துவதில் ரஜினி ஆர்வம் செலுத்துவதில்லை. எப்போது, யார் தொடர்புகொள்ள நினைத்தாலும், அவரது உதவியாளர், ஓட்டுநர்களான ஆறுமுகம், சுப்பையா, கணபதி இந்த மூன்று நபர்களின் வழியாகத்தான் பேச முடியும். ரஜினிக்கு தகவல் போய் சேர்ந்ததும், அவர் விரும்பினால், தன்னை அழைத்த நபரிடம் ரஜினியே போனில் பேசுவார்.
#எந்த ஊருக்கு, வெளிநாட்டுக்கு சென்று திரும்பினாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கி வருவதை இப்போதும் கடைபிடித்து வருகிறார்.
#இரவோ, பகலோ மனதில் பட்டால் காரை எடுத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குமுன் சென்று நின்றுவிடுகிற பழக்கம் அவருக்கு இப்போதும் உண்டு. அப்படி சந்திக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சாலைப் பயணமாக, நீண்ட தூரம் காரில் பறப்பார். அவர்களிடம் நாட்டுநடப்புகள், புதிய படங்களின் போக்குகள், இளம் நடிகர்கள், அரசியல் ஆகியவை குறித்து ஆழமாக பரிமாற்றம் செய்துகொள்கிறார்.
#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்புவிழா அன்று, 1980களில் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் வரும்போதெல்லாம் ரஜினி, ராஜாவிடம் சொல்லி சிலிர்ப்பாராம்.
#ரஜினிக்கு கடிதம் கொடுக்க விரும்புகிறவர்கள், ராகவேந்திரா மண்படத்துக்கு வந்து கொடுத்துப்போகலாம். அப்படி வந்து குவியும் கடிதங்களை அக்கறையோடு படித்து வருகிறார் ரஜினி. உதவியாளர்கள் அதில் சிலதை தேவையில்லாதது என்று பிரித்து தனியே ஒதுக்க முயற்சித்தால், ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று அன்புடன் கண்டிக்கவும் செய்வாராம்.
#நீச்சல் என்றால் ரஜினிக்கு உயிர். சென்னை, கடற்கரைச்சாலை பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.
#சமீப நாட்களாக அவருக்கு பிடித்த விஷயம் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பழைய தமிழ்ப்படங்களை பார்ப்பது. குறிப்பாக அவர் பரபரப்பான ஷூட்டிங்கில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களை எல்லாம் இப்போது ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்.
#படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஒன்று படிப்பார், இன்னொன்று தூங்குவார்.
#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மொட்டைமாடி கீற்று கொட்டகையில் தரையில் அமர்ந்து, வாழை இலை போட்டு சாப்பிடுவதை பெரிதும் விரும்புவார்.